வாரநாட்களின் காலைப் பொழுது - இதன் மெய்ப்பொருள் யாரையும் விடவும் குடும்பத் தலைவிகளுக்கே விளங்கும்.
பெரும்பாலும் அனைவரும், தன் உடல் சார்ந்து, ஒழுக்கம் சார்ந்து, "காலைக்கடன்" என்றொரு சிறு பட்டியல் வைத்திருப்பர், அதிலும் சிலர் ஒன்றிரண்டை விட்டுவிடுவர். குடும்பத்தை ஏற்று நடத்தும் பெண்களுக்கோ அது தன்னைச் சார்ந்ததன்று - பிறர் சார்ந்தது, அது சிறிதன்று சற்றே நீளமானது, ஒன்றிரண்டை விட்டுவிடுவதற் கெல்லாம் வாய்ப்பில்லை. அனைத்தையும் குறித்த நேரத்தில் முடித்தாக வேண்டும். காலைப் பொழுது பெண்களுக்கு பரபரப்பானது!
அப்படியோர் காலை வேளையில், கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு - கணவனையும் மகளையும் வேலைக்கு அனுப்பிவிட்டு, பரபரப்பெல்லாம் அடங்கிய பின்னர், காலையில் போட்ட தேநீரை மீண்டும் சூடேற்றி படுக்கை அறைக்குள் நுழைந்து, அப்போதும் தூங்கிக் கொண்டிருந்த தன் மகனை இடது காலால் இடித்து எழுப்பி "இந்தாப் புடி" என்று தேநீர்க் குவளையைக் கொடுத்துவிட்டுச் சென்றார் "வெற்றி"யின் தாய்.
தாயின் செயலால் துயில் கலைந்தெழுந்த வெற்றி தேநீரைப் பருகிக்கொண்டே மணியைப் பார்த்தான், ஒன்பதைக் கடந்திருந்தது. "அடடா, இவ்வளவு நேரமா தூங்கிவிட்டோம்! உடனே கிளம்ப வேண்டும்" என்று மனத்தில் நினைத்துக் கொண்டு கையில் வைத்திருந்தத் தேநீரைக் கடகடவென குடித்து விட்டு குளிக்கக் கிளம்பினான், குளியலறைக்குப் போகும் வழியில் "முன்னாடியே எழுப்பி இருக்கக் கூடாதா" என்று தன் தாயைக் கடிந்து கொண்டே ஓடினான். சட்டெனக் குளித்து முடித்து அணியமாகி வெளியே வந்தவனிடம் "தின்னுட்டு போடா" என்று தாய் சொல்ல - "வந்து சாப்பிடுறேன், நேரம் ஆகிடிச்சு" என்று மட்டும் சொல்லிவிட்டு தன் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு விரைந்தான். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த எதிர்வீட்டுக் கவிதாவிடம் "நாய்க்கு வேலை இல்லை, நிற்க நேரமில்லை" என்று தன் மகனின் பெருமையைக் கூறி மகிழ்ந்தார் வெற்றியின் தாய்.
சாப்பிடாமல் கொள்ளாமல் அப்படி எங்கே செல்கிறான் வெற்றி?
திருச்சியின் புறநகர் பகுதியில் ஊருக்கு வெளியே அமைந்திருந்த ஒரு கல்லூரியில் கணிப்பொறியியல் படித்து முடித்து ஓராண்டாகியும் வேலையில்லாமல் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான் வெற்றி.
அவன் இன்னமும் இரண்டு பாடங்களில் தேறவில்லை ஆதலால் அதையே காரணம் காட்டி வேலைத் தேடுவதையே நிறுத்திவிட்டான். அவனுடைய நண்பர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வேலைக் கிடைத்துப் பணியில் சேர்ந்து விட்டபடியால் வெற்றிக்கு இப்போதெல்லாம் பொழுது போக்கக்கூட ஆளில்லை.
அந்த வரிசையில் கடைசியாக வேலைக் கிடைத்து பணியில் சேர்ந்தவன் தான் "புகழ்". புகழ் இயந்திரவியல் படித்தவன், அத்துறையிலேயே வேலைக் கிடைத்து விட்டதில் அவனுக்கு மகிழ்ச்சியே.
புகழுக்கு பக்கத்து ஊர் தான், மிதிவண்டியை எடுத்தால் ஐந்து பத்து நிமிடங்களில் அடைந்துவிடலாம். கடந்த ஓராண்டுக் காலம் வெற்றி எப்போதும் புகழ் வீட்டிலேயே தான் இருந்தான். இப்போது அவனும் வேலைக்குச் சென்றுவிட்டதால் ஒருவாரமாக என்ன செய்வதென்றுத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். வார இறுதிக்காய் காத்திருந்து நண்பனை சனிக்கிழமை சந்திக்கச் சென்ற வெற்றிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
வீட்டில் புகழ் இல்லை என்பதை தெரிந்து கொண்டு அவனுக்கு அழைத்துப் பேசினான். "மச்சி நான் கம்பனில இருக்கேன் டா, இன்னைக்கு ஷிஃப்ட்" என்றும் அங்கே "சனி ஞாயிறும் வேலை உண்டு, முன்னரே திட்டமிட்டு வார நாட்களில் ஏதேனும் இரண்டு நாட்கள் விடுப்பெடுத்துக் கொள்ளலாம்" என்றும் கூறி திங்களன்று சந்திப்போம் என்றான்.
இன்று திங்கட்கிழமை, புகழுக்கு "வீக் ஆஃப்", அவனைப் பார்க்கத்தான் வெற்றி விரைந்தான். இயந்திரவியல் படித்த புகழுக்கும் கணிப்பொறியியல் படித்த வெற்றிக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது என்பது ஒரு சுவாரசியமான கதை. அதைத் தெரிந்து கொள்ள நாம் மூன்று ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
வெற்றி கல்லூரியில் சேர்ந்து ஆறு மாதக்காலம் ஆகியிருந்தது, முதல் பருவத் தேர்வு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்றொருநாள் தேர்வுக்கு முன் அறிவிக்கைப் பலகையில் தன்னுடைய இருக்கை எண்ணைச் சரிபார்த்தான். தன்னுடைய வகுப்பறையிலேயே அவனுக்கு இருக்கை எண் அமைந்திருந்தது ஆனால் அது பெண்கள் அமரும் பகுதியில் இருந்தது. வினாத்தாள் வழங்கப்பட்டதும் அனைவரும் கேள்விகளைப் படித்து பதில் எழுதத் தொடங்கினார்கள். வெற்றியோ வழக்கம் போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். படித்திருந்தால் தானே?
"ஒருமணி நேரமாவது ஆனால் தான் வெளியே விடுவார்கள், அதுவரை இங்கே அமர்ந்துகொண்டு என்ன செய்வது? " என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். சும்மா இருக்க முடியாமல் தான் அமர்ந்திருந்த பென்ச்சில் கல்தச்சர் கல்வெட்டில் எழுதுவது போல் தன் பெயரை அழகாய் செதுக்கி வைத்தான். பெருமுயற்சி செய்து ஒருமணி நேரத்தை வீணடித்து முடித்து வெற்று-விடைத்தாளைக் கொடுத்துவிட்டு வெளியேறினான்.
தேர்வுக்குப்பின் மாணவர்கள் அனைவரும் அவரவர் இருக்கையில் வந்து அமர்ந்தார்கள். நந்தினி, தேவி, பவித்ரா, நான்சி நால்வரும் இருக்கைக்கு வந்ததும் அமராமல் பென்ச்சில் சுட்டிக் காட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். தற்செயலாக இதைப் பார்த்த வெற்றிக்கு அபோது தான் புரிந்தது, தான் எழுதிய தன் பெயரைக் காட்டித்தான் அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்களென்று! உண்மையில் தான் அமர்ந்திருந்தது பெண்கள் பகுதி என்று தெரியுமோ தவிர இவர்களுடைய பென்ச் என்று வெற்றிக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் அப்படி தன் பெயரை எழுதி இருக்க மாட்டன். காரணம் "பவித்ரா".
பவித்ராவும் வெற்றியும் ஒரே ஊர்தான். ஒரே பேருந்து நிறுத்தத்தில் தான் இருவரும் கல்லூரிப் பேருந்தை பிடிக்க வேண்டும். கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே நிறுத்தத்தில் வைத்து பவித்ராவைப் பார்த்தான் வெற்றி, இல்லை கண்களாலேயே அளவெடுத்தான் என்று தான் சொல்ல வேண்டும்!
அவள் அப்படி ஒன்றும் நிறமில்லை, மாநிறம் தான். வெற்றிக்கோ சாக்லேட் போலத் தோன்றினாள், களங்கமே இல்லாத முகம், அப்படி என்னதான் ஸ்கின்கேர் செய்கிறாளோ! என்று எண்ணிக்கொண்டான். முகத்தில் எப்போதும் ஒரு அமைதி, அக்கம் பக்கம் பேசும்போது கூட அதிர்ந்து பேசவில்லை, ஆர்ப்பாட்டமில்லாத அழகு. நல்ல உயரம், முழுவதும் "பிங்க்" நிற ஆடையில் ரோஜா மலர் போலவே தெரிந்தாள் அவன் கண்களுக்கு. தலை முதல் கால் வரை ஆராய்ந்து முடித்து பெருமூச்சு விட்டான்.
அன்றிலிருந்தே வெற்றி பவித்ராவை வைத்தக்கண் விலக்காமல் பார்த்துக் கொண்டிருப்பான்.
ஏற்கனவே வெற்றி பவித்ராவை சைட் அடித்துக் கொண்டிருப்பது பலருக்கும் தெரிந்திருந்த சூழலில், இப்போது அவர்கள் பென்ச்சில் இப்படி பெயர் எழுதிவிட்டோமே! என்ன ஆகப்போகிறதோ! என்று தவித்தான். ஆசிரியர் வகுப்பறைக்குள் வந்ததும் இயல்பு நிலைக்குத் திரும்பினர் அனைவரும்.
அடுத்த நாள் தேர்வின் போதும் வெற்றிக்கு அதே இருக்கை தான், அங்கே அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
வழக்கம் போல இம்முறையும் தேர்வு எழுதாமல் நேரம் போக்கிக்கொண்டு இருந்தான், சரி நேற்று தான் எழுதி வைத்தது இன்னும் இருக்கிறதா பார்ப்போம் என்று விடைத்தாளைக் கொஞ்சம் நகர்த்தினான். அங்கே அவன் பெயருக்கு மேலே "ஸ்டுப்பிட்" என்று எழுதி இருந்தது. அதைப் படித்ததும் வெற்றிக்குக் கோபம் கொப்பளித்தது, ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். "அந்த இருக்கையில் அமரும் நால்வரில் இதைச் செய்தது யாராக இருக்கும் என்று எண்ணிப் பார்த்தான், "பவித்ரா இப்படிச் செய்யக் கூடியவள் அல்ல. மிகவும் நல்லப் பெண், ஒருவேளை அவள் தான் செய்திருப்பாளோ? ஏன் இருக்காது, நாம் பார்ப்பது அவளுக்கும் தெரியும். வேண்டுமென்றே தான் இப்படி எழுதி இருக்கிறாள்!, எதாவது செய்தாக வேண்டும்" என்று முடிவு செய்தான்.
சில வினாடியில் அவன் முகம் மலர்ந்தது, இதழின் ஓரத்தில் முறுவல் பூத்தது, ஆம் அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்து விட்டான். "ஸ்டுப்பிட்" என்று எழுதி இருந்ததல்லவா? அதற்கு முன்பு "ஸ்வீட்" என்று எழுதி கடைசியில் ஒரு கேள்விக்குறியும் இட்டு வைத்தான்!
முழுவதும் பார்பதற்கு அது "ஸ்வீட் ஸ்டுப்பிட்?" ஆ எனக் கேட்பது போல் இருந்தது.