Sunday, July 23, 2017


2. பெண்டாட்டி தாசன்


              காலையில் எழுந்ததும் முதல்வேலையாக அலைப்பேசியை எடுத்து வாட்சப்பை திறந்தேன். முழுக்க வாழ்த்துச் செய்திகள். ஆம், ஆவனி எட்டு, இன்றெனக்கு பிறந்தநாள். எல்லா வாழ்த்துக்கும் நன்றி தெரிவித்து விட்டு கடைசியாக அக்காவின் வாழ்த்துச் செய்தியை பார்த்தேன். வாழ்த்தே ஒரு வகையாக இருந்தது. "இந்த ஆண்டுக்குள் உனக்கு திருமணம் நடந்துவிடும்" என்றும் "இனி எல்லாமே உனக்கு நல்லதாகவே தான் நடக்கும்" என்றும் வாழ்த்து அனுப்பி இருந்தாள். "இது என்ன முன்னுக்கு பின் முரணாக இப்படி ஒரு வாழ்த்து அனுப்பி இருக்கிறாள் அக்கா?, திருமணம் நடந்துவிட்டால், பிறகு நடக்கும் நல்லதும் நாசமாக அல்லவா போகும்" என நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். 

              ஆம், மூன்று மாதங்களுக்கு முன் தனக்கு குழந்தை பிறந்ததும் எனக்கு பெண் பார்க்கும் வேலையை துவங்கச்சொல்லி, இனியும் நேரம் கடத்தினால் பிறகு இவனுக்கு திருமணமே நடக்காது என்றொரு குண்டை போட்டு அப்பா அம்மாவை அதிரிரச் செய்தாள் அக்கா. "நானா வேண்டாம் என்கிறேன், இவன் தான் இப்போது வேண்டாம் என்கிறான்" என்றார் அப்பா. நான் திருமணம் செய்யாமல் எவ்வித பொறுப்புமின்றி  மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதில் அக்காவுக்கு கொஞ்சம் வயிற்றெரிச்சல். எப்போது வீட்டுக்கு வந்தாலும் என்னுடைய திருமணப் பேச்சு தான். இம்முறை குழந்தை பிறந்த போது வந்திருந்த உறவினர்களும் திருமணப் பேச்சை எடுத்ததால், எப்படியும் என்னை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று உறுதியுடன் இருந்தாள்.

              எனக்கோ, என்ன தான் அதை நினைத்தால் சற்று குறுகுறுப்பாக இருந்தாலும் இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை, வேண்டாம் என்று வழக்கமான பதிலை தந்தேன். "இப்போது தொடங்கினால் தான் ஓராண்டுக்குள் முடியும்" என்று மேலும் உறுதியுடன் கூறினாள் அக்கா, அதற்கு நானோ "எனக்கெல்லாம் அப்படி ஆகாது, எந்த எதிர்பார்ப்பும் இல்லை, ஆகையால் முதலில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து கொள்வேன்" என்றும் "இப்போது பார்த்தால், இப்போதே முடிந்துவிடும், என்னை விட வயதில் பெரிய என் நண்பர்களுக்கே இன்னும் திருமணம் ஆகவில்லை, அதனால் கொஞ்சம் காலம் ஆகட்டும்" என்றேன். ஆனால் அக்கா விடுவதாக இல்லை, இம்முறை மாமாவிடம் வேறு மாட்டிவிட்டாள், எப்போதும் அவர் இது பற்றி பேச மாட்டார். ஆனால் இம்முறை அவரும் என்னிடம் கேட்டார். நானோ எனக்கெதற்கு இப்போது திருமணம் என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில், என்னால் எதுவும் பேச இயலவில்லை. 

              "எதற்கென்றால் என்ன, இதற்கெல்லாமா காரணம் வேண்டும், வாழைப்பழம் பழுத்தால் உரித்து சாப்பிட வேண்டியது தான்" என்றார். அதிர்ந்து போனேன். "அதெல்லாம் இல்லை" என்றேன், இதழ்களில் மெல்லிய சிரிப்போடு. பிறகு அப்பாவிடம் "மாமா, இவன் இப்படி தான் சொல்வான், நீங்கள் பெண் பார்க்கும் வேலையை துவங்குங்கள், அப்போது தான் அவனுக்கும் அதில் ஒரு ஆர்வம் வரும்" என்றார். மாமா சொன்னதும் சரிதான் என்னும் முடிவுக்கு வந்து விட்டார் அப்பா, "சரி பார்த்துவிடுவோம்" என்றார். என்னை சிக்க வைத்துவிட்டதில் பெருத்த மகிழ்ச்சி அக்காவுக்கு. அந்த மகிழ்ச்சியுடனே ஊருக்கு கிளம்பிச் சென்றாள்.

              அக்கா ஊருக்கு கிளம்பிச் சென்றதும் உறவினர்களிடத்தில் எல்லாம் சொல்லி வைத்தார்கள், எனக்கு பெண் பார்க்கும் செய்தியை. சிறிது நாட்களில் ஒரு பெண் வீட்டில் இருந்து அப்பாவுக்கு அழைப்பு வந்தது, பெண்ணின் தந்தையுடன் அப்பா அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த நேரம் எனக்கு ஏதோ செய்தது. படபடப்புடன் அவர்களின் அலைப்பேசி உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தேன், முதலில் என்னை பற்றிய விவரங்களை கொடுத்தார். பிறகு ஜாதகத்தையும் புகைப்படத்தையும் அனுப்பி வைப்பதாகவும் பதிலுக்கு தாங்களும் பெண்ணின் புகைப்படமும் ஜாதகமும் அனுப்பி வையுங்கள் என்றும், கூறி முடித்தார்.

              ஒரு காகிதமும் பேனாவும் கொடுத்து என்னுடைய ஜாதகத்தை அழகாக எழுதச் சொன்னார் அப்பா. நானோ அதெல்லாம் வேண்டாம் என்று என்னுடைய கைப்பேசியில் நோட்ஸ் அப்ளிகேஷனில் ஜாதகத்தை எழுதி அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து என்னுடைய புகைப்படத்தையும் - ஆம், சற்று அழகாக இருக்கும் புகைப்படத்தை தேடி எடுத்து பெண்ணின் தந்தைக்கு வாட்சப்பில் அனுப்பி வைத்தேன். சிறிது நேரத்தில் கைப்பேசியில் மணி அடித்தது. அப்பாவும் அம்மாவும் மிகவும் ஆர்வம் காட்டினார்கள், நான் ஒரு வித பதற்றத்துடன் பேசியை எடுத்து வாட்சப்பை திறந்தேன். பதற்றம் நீங்கி நிம்மதியுடன் மூச்சு விட்டேன். 

              மிகவும் குண்டாக ஒரு பெண்ணின் புகைப்படம். பார்த்ததும் என்ன சொல்வதென்று தெரியாமல் அப்பாவிடம் கொடுத்தேன், அவர் என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன், அவருடைய டேஸ்ட் எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?. அப்பாவும் அம்மாவும் வாங்கி பார்த்து விட்டு எதுவும் சொல்லவில்லை. "சரி, பிறகு என்ன ஜோசியரிடம் போய் பொருத்தம் பார்க்கலாமா" என்றார். பேரதிர்ச்சிக்குள்ளானேன். இனியும் அமைதியாக இருந்தால் எல்லாம் வீணாக போய்விடும் என்று முடிவு செய்து என்னுடைய விருப்பத்தை கூறினேன்.

              "ஒல்லியான உயரமான பெண்ணைத்தான் நான் திருமணம் செய்வேன் என்றும் எப்படி இருந்தாலும் சரியென சொல்வேன் என்று நினைக்க வேண்டாம்" என்றும் கோபமாக கூறினேன். " ம்ம்ம், இப்படி சொன்னால் தானே தெரியும். அப்படியே பார்த்துவிடுவோம், இந்த பெண் வேண்டாம் என்றால் விட்டு விடுவோம் " என்று சாதாரனமாக கூறினார் அப்பா. நானோ "அதெப்படி ஜாதகம் பார்க்கலாமா? எனக்கேட்கலாம், இந்த பெண் பார்ப்பதற்கு என்னை விட பெரிய பெண்ணாக தோன்றுகிறாள், இருந்தும் ஜாதகம் பார்க்க முடிவெடுத்தால் என்ன நியாயம்" என்றேன் கடும் கோபத்துடன். 

              "டேய், புகைப்படமும்  ஜாதகமும் வந்த பிறகு ஜோசியரிடம் போய் காட்டி ஜாதகப் பொருத்தம் பார்ப்பது தான் உலக வழக்கம்" என்றார்.  "அதெல்லாம் ஒன்றும் இல்லை, முதலில் என்னைக் கேட்க வேண்டும், எனக்கு பிடித்திருந்தால் தான் ஜோசியரிடம் போக வேண்டும்" என்றும் "நான் இந்த பெண்ணை ரிஜக்ட் செய்கிறேன்" என்றும் சீற்றத்துடன் கூறினேன். அப்பாவின் டேஸ்ட் சரி யில்லை, ஏதோ ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விடுவார் எனும் பயத்தில் நான் கோபமடைந்து கூறினேன். ஆனால் அப்பாவோ, "சரி விடு, இதற்கு ஏன் கத்துகிறாய்" , என்று கூலாக கூறிவிட்டு நகர்ந்தார்.

              மேற்சொன்ன நிகழ்ச்சி நடந்தது முதல் இன்று வரை நிறைய பெண்களை நான் ரிஜக்ட் செய்து விட்டேன், இப்போது அப்பாவுக்கே புரிந்து விட்டது என்னுடைய டேஸ்ட், அவரே பார்த்ததும் முடிவு செய்து விடுகிறார், "என்ன ரிஜக்டடா" என்றும் கேட்கிறார். மூன்று மாதங்களாக இப்படியே தான் நடக்கிறது, அதனால் நான் வருத்தத்தில் இருப்பேன் என்று நினைத்தாளோ என்னவோ இப்படி ஒரு வாழ்த்து அனுப்பி இருக்கிறாள் அக்கா. உண்மையில் நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை, தள்ளிப்போவதில் மகிழ்ச்சியே.

              வாட்சப் வாழ்த்தை படித்துக் கொண்டிருக்கும் போதே அக்காவிடம் இருந்து அழைப்பு வந்தது, நான் பேசாமல் அம்மாவிடம் கொடுத்து "உன் பொண்ணு தான் பேசுறா, பேசு" என்றேன். அம்மாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அப்பாவிடம் பேசினாள் அக்கா. "இப்படியே இருந்தாள் எப்படி, சிவா ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரிடம் காண்பித்து எப்போது திருமணம் நடக்கும் என்று விசாரியுங்கள்" என்று கூறினாள். அதுவும் சரிதான் என்றும் "நாமே பார்த்துக் கொண்டிருக்கிறோம், இவனுக்கு திருமண யோகம் வந்துவிட்டதா என்பது கூட தெரியவில்லை, ஆகவே ஜாதகம் பார்க்கத்தான் வேண்டும்" என்றும் முடிவுக்கு வந்தார் அப்பா.

              இரண்டு நாட்கள் கழித்து நானும் அப்பாவும் என்னுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஜோதிடரிடம் சென்றோம். அப்பாவுக்கு இதிலெல்லாம் அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது, எனக்கோ சுத்தமாக இல்லை. உள்ளே நுழைந்ததும் வணக்கம் கூறினார் ஜோதிடர், பதிலுக்கு நானும் வணங்கினேன். அப்பாவைப் பார்த்து "நீங்கள் வந்த நேரம் 5.20, இந்த நேரத்தில் இன்னின்ன கோள்கள் இன்னின்ன இடத்தில் இருக்கின்றன" என்று ஜோதிட சொற்களில் கூறி, "ஆகவே பிரவேச  நேரக் கணிப்பு படி நீங்கள் இப்போது தம்பியின் வேலைவாய்ப்பும் குடும்ப நிலையும் பற்றி அறிந்துகொள்ள வந்திருக்கிறீர்கள்" என்றார். எனக்கோ குபுக்கென்று சிரிப்பு வந்தது, அடக்கிக் கொண்டேன்.

              சும்மா இருந்திருந்தால் நாமே கூறியிருப்போமே, இவர் தேவையில்லாமல் பிரவேச நேரத்தை கணித்து இப்படி மொக்கை வாங்கி விட்டாரே என்று நினைத்துக் கொண்டு அப்பாவை நக்கல் பார்வை ஒன்று பார்த்தேன். அப்பா எதுவும் சொல்லவில்லை, பிறகும் கூட ஜோதிடர் எங்களிடம் எதை பற்றி அறிய வந்திருக்கிறோம் என்று கேடகாமல் அவரே தொடர்ந்தார். எதிரே இருந்த பெரிய பலகையில் என்னுடைய ஜாதகத்தை எழுதி "இது தான் லக்னம், அதற்கு அடுத்து இரண்டாவதாக இருக்கும் கட்டம் குடும்பஸ்தானம்" என்று வரிசையாக பன்னிரண்டு கட்டங்களுக்கும் ஒரு பெயரைச்சொல்லி ஜோதிட வகுப்பு எடுக்க தொடங்கினார். ஏழாம் கட்டத்தை காட்டி, "இது தான் திருமணஸ்தானம்" என்றதும் கொஞ்சம் கவனம் செலுத்தினேன். ஏழாம் கட்டத்தின் அதிபதி இருக்கும் நிலை, கட்டத்தில் இருக்கும் கிரகம் மற்றும் கட்டம் பெறும் பார்வை என்று ஏதேதோ சொல்லி விட்டு, அதன் பலங்களை கூறத்தொடங்கினார். தம்பி இரண்டு வருடத்திற்கு முன் காதல் வலையில் விழுந்துவிட்டார் என்றும் காதல் திருமணம் தான் இவருக்கு நடக்கும் என்றும் அப்படித்தான் வரம் வாங்கி வந்திருக்கிறார் என்றார். அப்பா என்பக்கம் முகத்தை திருப்பி மேலும் கீழும் பார்த்தார். நான் ஒன்றும் சொல்லவில்லை, ஜோதிடர் பக்கம் பார்வையை திருப்பினேன்.

              பிறகு ஏனைய கட்டங்களின் நிலையையும் பலங்களையும் கூறி முடித்து, சிக்கலான பாடத்தை சுலபமாக சொல்லிக் கொடுத்து முடித்த பள்ளி ஆசிரியரைப் போல பெருமிதத்துடன் இருக்கையில் வந்து அமர்ந்தார். "நான் தான் பேசிக்கொண்டே இருக்கிறேன், நீங்கள் எதுவுமே கேட்கவில்லையே என்றார். அப்போது அப்பா, "நங்கள் வந்ததே திருமணம் பற்றி அறியத்தான், ஆனால் நீங்களோ முதலில் வந்ததும் பிரவேச கணிப்பில், வேலைவாய்ப்பும் குடும்பமும் என்றீர்கள்" என்றார். உடனே இடைமறித்த ஜோதிடர் "நான் தான் குடும்பம் என்று சொன்னேனே குடும்பத்தில் தான் திருமணமும் அடக்கம்" என்றார் பதற்றத்துடன். அப்பா அமைதி ஆனார். அப்போது நான் பேச்சை தொடர்ந்தேன். "இல்லை இல்லை, நீங்கள் சொன்னபடி வேலைவாய்ப்பு லக்னத்தில் இருந்து பத்தாம் ஸ்தானம், குடும்பம் இரண்டாம் ஸ்தானம், நாங்கள் வந்தது ஏழாம் ஸ்தானம் ஆகிய திருமணத்தை பற்றி அறிந்து கொள்ள" என்று கிடிக்கிப்பிடியில் சிக்க வைத்தேன். பேரதிர்ச்சிக்கு உள்ளானார் ஜோதிடர்.

              ஜோதிடர் முகத்தில் ஈயாடியது, அவரை சிக்கவைத்த மகிழ்ச்சி என் முகத்தில் முறுவலாய் பூத்தது. இவ்வளவு விளக்கமாக பாடம் எடுத்து மொக்கை போட்டது எவ்வளவு பெரிய பிழை என்பதை தற்போது உணர்ந்திருப்பார் ஜோதிடர் என்று நினைத்தேன். ஆனால் அவரோ மீண்டும் எழுந்து பலகையின் அருகில் சென்று என்னை வாயடைக்கச் செய்தார். இது என்னடா இது, மீண்டும் மொக்கை போட எழுந்துவிட்டாரே என்று மிரண்டு போனேன். "இல்லை தம்பி திருமணம் என்று வரும் போது வெறுமனே ஏழாம் வீட்டை மட்டும் பார்க்கக்கூடாது, அதனுடன் குடும்பத்தைக் குறிக்கும் இரண்டாம் வீட்டையும், கூடவே பன்னிரண்டாம் வீடான அயன சயன வீட்டையும் சேர்த்தே தான் பார்க்க வேண்டும்" என்று சமாளித்தார். 

              "முதலில் நான் சொன்னது மேலோட்டமாக, இப்போது ஏழாம் வீட்டின் பிரத்தேய பலங்களை கூறுகிறேன் கேளுங்கள்" என்று தொடர்ந்தார். இம்முறை பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்த்தேன். "தம்பி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் காதலில் விழுந்துவிட்டீர்கள், என்று கட்டம் சொல்கிறது" என்று என்னைப் பார்த்தார். "காதலில் விழுந்தால் நாங்கள் ஏன் உங்களிடம் வருகிறோம்" என்றேன், "மூன்று மாதங்களாக பெண் பார்க்கிறோம், ஒன்றும் அமையவில்லை" என்றார் அப்பா. சற்று கோபமடைந்தார் ஜோதிடர் என்றே கருதுகிறேன், காரணம் தொடர்ந்து அவர் கூறிய சொற்கள் அப்படி. "சரி தம்பி உன்னுடைய ஜாதகப்படி நீ மாமியார் வீட்டோடு மருமகனாவாய், திருமணத்திற்கு பிறகு அப்பா அம்மாவிடம் அதிகம் ஒட்டாமல் மாமனார் மாமியாரோடு போய்விடுவாய், பெண்டாட்டி தாசனாகத்தான் வாழப்போகிறாய்" என்று உச்சஸ்தாயியில் முழங்கினார். 

              பெண்டாட்டி தாசன் என்று சொன்னதும் அப்பாவை பார்த்தேன், சந்தேகமும் ஏளனமும் கலந்த பார்வை ஒன்றை என்மீது வீசினார் அப்பா. "இவர் ஏன் நம்மை  இப்படி பார்க்கிறார், ஒரு வேளை இந்த ஜோதிடர் கூறிய வார்த்தைகளை நம்பி விட்டாரோ" என்று யோசித்தேன். "அதெல்லாம் இருக்காது" என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன், இருந்தாலும் "இவரு வேஸ்ட்டு பா, முதலில் இருந்தே எதையும் சரியாக கூறவில்லை" எனக்கூறி என்ன சொல்கிறார் பார்க்கலாம் என்று நினைத்தேன். அப்பாவின் பதில், என்ன சொல்வதென்றே தெரியாமல், திருதிருவென முழித்தேன். "அதெல்லாம் சரிதான், அவர் எதையும் சரியாகத்தான் சொல்லவில்லை, என்றாலும், பெண்டாட்டி பேச்சைக் கேட்டு ஆடக்கூடியன் போலத்தான் இருக்கிறது உன்னுடைய முழி" என்றார், முகத்தில் ஏளனம் கூட்டி. 

              உடனே "சரி வாப்பா, வீட்டுக்கு போகலாம்" என்று  ஹெல்மட்டை அணிந்து கண்ணாடியை இழுத்து விட்டு முகத்தை மூடினேன் குறிப்பாக முழியை மூடினேன். அப்பா வண்டியில் ஏறியதும் எதுவும் பேசாமல் அதிவேகமாக வீட்டுக்கு விரைந்தேன்.







Thursday, July 13, 2017

1. நிலவின் வருகை


சித்திரை திங்கள் முழுமதி நாளில்
அத்தனை விண்மீன் அரண் உடைத்தே
வான்விட் டிறங்கி வான்னில வும்
தானே வந்தது தரணிக் கே

               தாம்பரம் பேருந்து நிலையம், வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. காரணம் அன்று சித்திரை முழுமதி, அனைத்து பேருந்துகளும் திருவண்ணாமலை நோக்கி திருப்பி விடப்பட்டிருந்தது, எனினும் கூட்டத்தின் தேவையை நிறைவு செய்ய போதவில்லை. மிக நீண்ட வரிசையில் நின்று ஒருவழியாக நானும் என் நண்பர்களும் பயணச்சீட்டு பெற்று பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தோம். கிரிவலம் போகவேண்டும் என்பது எங்களுடைய வெகுநாள் ஆசை. இன்றைக்கு அது நிறைவேறப் போகிறது.


               சற்று நேரத்தில் பேருந்து புறப்பட்டு பெருங்களத்தூரை அடைந்தது, அங்கேயும் கொஞ்சம் கூட்டம் ஏறியது. அப்போது என் தந்தை எனக்கு அலைப்பேசியில் அழைத்தார். அக்காவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்றார். அக்காவுக்கு இது இரண்டாவது குழந்தை, முதலில் ஒரு ஆண் குழந்தை, எனவே பெண் பிறந்ததில் அனைவருக்குமே மகிழ்ச்சி. "நான் திரும்பி வந்துவிடவா, பேருந்து பெருங்களத்தூரில் தான் இருக்கிறது" என்றேன். "வேண்டாம் வேண்டாம், குழந்தை பிறந்துவிட்டது தாயும் சேயும் நலம் தான். எதுவும் சிக்கல் இல்லை, நீ கோவிலுக்கு சென்று காலையே வா" என்றார். குழந்தை பிறந்த செய்தியை நண்பர்களுக்கும் கூறி மகிழ்ந்தேன்.


               இரவு ஏறியது, வானில் நிலவும் தண்ணொளி வீசத் தொடங்கியது. தன் வெள்ளி ஒளியால் பூமியெங்கும் வெள்ளி முலாம் பூசியது போல் ஆக்கியது. கிரிவலப் பாதை எப்படியும் பதினேழு கிலோ மீட்டர் இருக்கும், கோடைக்காலத்தில் இரவு நேரத்தில் நடந்து செல்வது நன்றாக இருந்தது. கிரிவலப்பாதை எங்கும் கடைகள். பழச்சாறுக்கடை, உணவுக்கடை என எல்லாமே அங்கே இருந்தது. நாங்கள் எதுவும் சாப்பிடவில்லை. ஆங்காங்கே லெமன் சோடா மட்டும் பருகிக் கொண்டு பயணம் தொடர்ந்தோம், பல கதைகள் பேசிக்கொண்டு நடந்தோம். வழியில் சில இளம் ஜோடிகள் தோள் மீது கை போட்டுக்கொண்டு காதல் மொழி பேசிச்சென்றனர். அவர்களை பார்த்து பொருமினேன் நான். திருமணத்திற்கு பிறகு நானும் இவர்களை போலவே என்னுடைய இணையுடன் இவ்வாறே இரவு முழுக்க காதல் பேசி நடப்பேன் என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்.

 
               மலையை சுற்றி முடிக்கவும் கிழக்கு வானில் கதிரொளி பரவவும் சரியாக இருந்தது, கால்வலி உயிர் போனது. ஒருவழியாக முடித்துவிட்டோம் இனி வீடு திரும்பலாம் என்றெண்ணும் போது ஒரு அதிர்ச்சி, அங்கேயும் பேருந்து நிலையத்தில் ஏகப்பட்ட கூட்டம். பெரும்பாடு பட்டு சென்னைக்கு வரும் பேருந்தில் இடம் பிடித்தோம். அப்படி ஒரு தூக்கத்தை இது வரை நான் போட்டதில்லை அதுவும் பேருந்துப் பயணத்தில். பயண நேரம் முழுவதுமே உறங்கியபடியே வந்து சேர்ந்தோம்.


               வீட்டிற்கு வந்ததும் உடனே குளித்து முடித்து கிழக்கு தாம்பரம் கிறிஸ்துதாஸ் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கே தான் அக்காவை சேர்த்திருந்தார்கள். முதல்மாடியில் அறை கொடுத்திருந்தார்கள், உறவினர்கள் சூழ்ந்திருந்த அந்த அறையின் உள்ளே சென்று பார்த்தேன், அழகாய் ஒரு பெண்குழந்தை. அக்காவுக்கும் மாமாவுக்கும் வாழ்த்து கூறினேன். அனைவரும் பேசிக்கொண்டிருந்தோம், சற்று நேரத்தில் பேச்சின் திசை மாறியது. "வீட்டில் பெண் குழந்தை பிறந்தால், அது தாய்மாமனுக்கு திருமணம் செய்து வைக்கும்" என்றொரு விசித்திர பழமொழியை, நான் இதுவரை கேட்டறியாத புதுமொழியை கூறி என்னை கேலி செய்ய தொடங்கினர். "அடுத்து உனக்குத் தான் திருமணம் இன்னும் ஆறே மாதத்தில் உனக்கு திருமணம் முடுந்து விடும் பார்", என்றனர். வெட்கம் உள்ளுக்குள் பிடிங்கி தின்றது, இது எந்த ஊர் பழமொழியாக இருக்கும் என்று எண்ணினேன்.


               "எனக்கு இப்போது திருமணம் செய்யும் எண்ணமில்லை, அதனால் திருமணப் பேச்சை விடுங்கள்" எனக்கூறி ஒருவாறு அவர்களை சமாளித்து விட்டு வெளியே வந்து அங்கே போட்டிருந்த இருக்கையில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் உள்ளே இருந்த உறவினர்கள் வெளியே வந்தனர், அவர்கள் கிளம்பிவிட்டனர். என்னிடம் "சென்று வருகிறோம்" எனக்கூறி புறப்பட்டனர். "அப்பாடா", என நிம்மதி அடைந்தேன், இனி உள்ளே திருமணப் பேச்சை எடுத்து எனைக்கிண்டல் செய்து வெட்கப்பட வைக்க யாரும் இல்லை அல்லவா?


               மீண்டும் உள்ளே சென்றேன், அக்காவின் பக்கத்தில் படுத்திருந்தாள் குட்டிக்குழந்தை, அருகே சென்று முகத்தை பார்த்தேன். பால்நிலவை போன்ற பிஞ்சு முகம், சித்திரை பௌர்னமி நாளில் பிறந்தவள்முகம் முழுமதி போலவே தான் இருந்தது. எப்படி அது? வானத்தில் தான் எத்தனை எத்தனை நட்சத்திரம் அரண் அமைத்து நிலவினை  கடுங்காவல் புரிகிறது, இருந்தும் எப்படி அந்த அரணை உடைத்தெரிந்து பூமிக்கு வந்தது இந்த நிலவு? இந்த திங்கள் முகத்தவள் தான் எனக்கு திருமணம் செய்துவைக்கப் போகிறாளாமே, நினைக்கவும் மீண்டும் உள்ளம் குறுகுறுத்தது. அருகே சென்று முத்தம் தந்து மகிழ்ந்தேன்.