Sunday, March 1, 2026

1. ஸ்வீட் ஸ்டுப்பிட்

 வாரநாட்களின் காலைப் பொழுது - இதன் மெய்ப்பொருள் யாரையும் விடவும் குடும்பத் தலைவிகளுக்கே விளங்கும்.


பெரும்பாலும் அனைவரும், தன் உடல் சார்ந்து, ஒழுக்கம் சார்ந்து, "காலைக்கடன்" என்றொரு சிறு பட்டியல் வைத்திருப்பர், அதிலும் சிலர் ஒன்றிரண்டை விட்டுவிடுவர். குடும்பத்தை ஏற்று நடத்தும் பெண்களுக்கோ அது தன்னைச் சார்ந்ததன்று - பிறர் சார்ந்தது, அது சிறிதன்று சற்றே நீளமானது, ஒன்றிரண்டை விட்டுவிடுவதற் கெல்லாம் வாய்ப்பில்லை. அனைத்தையும் குறித்த நேரத்தில் முடித்தாக வேண்டும். காலைப் பொழுது பெண்களுக்கு பரபரப்பானது!


அப்படியோர் காலை வேளையில், கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு - கணவனையும் மகளையும் வேலைக்கு அனுப்பிவிட்டு, பரபரப்பெல்லாம் அடங்கிய பின்னர், காலையில் போட்ட தேநீரை மீண்டும் சூடேற்றி படுக்கை அறைக்குள் நுழைந்து, அப்போதும் தூங்கிக் கொண்டிருந்த தன் மகனை இடது காலால் இடித்து எழுப்பி "இந்தாப் புடி" என்று தேநீர்க் குவளையைக் கொடுத்துவிட்டுச் சென்றார் "வெற்றி"யின் தாய்.


தாயின் செயலால் துயில் கலைந்தெழுந்த வெற்றி தேநீரைப் பருகிக்கொண்டே மணியைப் பார்த்தான், ஒன்பதைக் கடந்திருந்தது. "அடடா, இவ்வளவு நேரமா தூங்கிவிட்டோம்! உடனே கிளம்ப வேண்டும்" என்று மனத்தில் நினைத்துக் கொண்டு கையில் வைத்திருந்தத் தேநீரைக் கடகடவென குடித்து விட்டு குளிக்கக் கிளம்பினான், குளியலறைக்குப் போகும் வழியில் "முன்னாடியே எழுப்பி இருக்கக் கூடாதா" என்று தன் தாயைக் கடிந்து கொண்டே ஓடினான். சட்டெனக் குளித்து முடித்து அணியமாகி வெளியே வந்தவனிடம் "தின்னுட்டு போடா" என்று தாய் சொல்ல - "வந்து சாப்பிடுறேன், நேரம் ஆகிடிச்சு" என்று மட்டும் சொல்லிவிட்டு தன் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு விரைந்தான். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த எதிர்வீட்டுக் கவிதாவிடம் "நாய்க்கு வேலை இல்லை, நிற்க நேரமில்லை" என்று தன் மகனின் பெருமையைக் கூறி மகிழ்ந்தார் வெற்றியின் தாய்.


சாப்பிடாமல் கொள்ளாமல் அப்படி எங்கே செல்கிறான் வெற்றி?


திருச்சியின் புறநகர் பகுதியில் ஊருக்கு வெளியே அமைந்திருந்த ஒரு கல்லூரியில் கணிப்பொறியியல் படித்து முடித்து ஓராண்டாகியும் வேலையில்லாமல் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான் வெற்றி.

அவன் இன்னமும் இரண்டு பாடங்களில் தேறவில்லை ஆதலால் அதையே காரணம் காட்டி வேலைத் தேடுவதையே நிறுத்திவிட்டான். அவனுடைய நண்பர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வேலைக் கிடைத்துப் பணியில் சேர்ந்து விட்டபடியால் வெற்றிக்கு இப்போதெல்லாம் பொழுது போக்கக்கூட ஆளில்லை

அந்த வரிசையில் கடைசியாக வேலைக் கிடைத்து பணியில் சேர்ந்தவன் தான் "புகழ்". புகழ் இயந்திரவியல் படித்தவன், அத்துறையிலேயே வேலைக் கிடைத்து விட்டதில் அவனுக்கு மகிழ்ச்சியே.


புகழுக்கு பக்கத்து ஊர் தான், மிதிவண்டியை எடுத்தால் ஐந்து பத்து நிமிடங்களில் அடைந்துவிடலாம். கடந்த ஓராண்டுக் காலம் வெற்றி எப்போதும் புகழ் வீட்டிலேயே தான் இருந்தான். இப்போது அவனும் வேலைக்குச் சென்றுவிட்டதால் ஒருவாரமாக என்ன செய்வதென்றுத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். வார இறுதிக்காய் காத்திருந்து நண்பனை சனிக்கிழமை சந்திக்கச் சென்ற வெற்றிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


வீட்டில் புகழ் இல்லை என்பதை தெரிந்து கொண்டு அவனுக்கு அழைத்துப் பேசினான். "மச்சி நான் கம்பனில இருக்கேன் டா, இன்னைக்கு ஷிஃப்ட்" என்றும் அங்கே "சனி ஞாயிறும் வேலை உண்டு, முன்னரே திட்டமிட்டு வார நாட்களில் ஏதேனும் இரண்டு நாட்கள் விடுப்பெடுத்துக் கொள்ளலாம்" என்றும் கூறி திங்களன்று சந்திப்போம் என்றான்


இன்று திங்கட்கிழமை, புகழுக்கு "வீக் ஆஃப்", அவனைப் பார்க்கத்தான் வெற்றி விரைந்தான். இயந்திரவியல் படித்த புகழுக்கும் கணிப்பொறியியல் படித்த வெற்றிக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது என்பது ஒரு சுவாரசியமான கதை. அதைத் தெரிந்து கொள்ள நாம் மூன்று ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.


வெற்றி கல்லூரியில் சேர்ந்து ஆறு மாதக்காலம் ஆகியிருந்தது, முதல் பருவத் தேர்வு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்றொருநாள் தேர்வுக்கு முன் அறிவிக்கைப் பலகையில் தன்னுடைய இருக்கை எண்ணைச் சரிபார்த்தான். தன்னுடைய வகுப்பறையிலேயே அவனுக்கு இருக்கை எண் அமைந்திருந்தது ஆனால் அது பெண்கள் அமரும் பகுதியில் இருந்தது. வினாத்தாள் வழங்கப்பட்டதும் அனைவரும் கேள்விகளைப் படித்து பதில் எழுதத் தொடங்கினார்கள். வெற்றியோ வழக்கம் போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். படித்திருந்தால் தானே?


"ஒருமணி நேரமாவது ஆனால் தான் வெளியே விடுவார்கள், அதுவரை இங்கே அமர்ந்துகொண்டு என்ன செய்வது? " என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். சும்மா இருக்க முடியாமல் தான் அமர்ந்திருந்த பென்ச்சில் கல்தச்சர் கல்வெட்டில் எழுதுவது போல் தன் பெயரை அழகாய் செதுக்கி வைத்தான். பெருமுயற்சி செய்து ஒருமணி நேரத்தை வீணடித்து முடித்து வெற்று-விடைத்தாளைக் கொடுத்துவிட்டு வெளியேறினான்.


தேர்வுக்குப்பின் மாணவர்கள் அனைவரும் அவரவர் இருக்கையில் வந்து அமர்ந்தார்கள். நந்தினி, தேவி, பவித்ரா, நான்சி நால்வரும் இருக்கைக்கு வந்ததும் அமராமல் பென்ச்சில் சுட்டிக் காட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். தற்செயலாக இதைப் பார்த்த வெற்றிக்கு அபோது தான் புரிந்தது, தான் எழுதிய தன் பெயரைக் காட்டித்தான் அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்களென்று! உண்மையில் தான் அமர்ந்திருந்தது பெண்கள் பகுதி என்று தெரியுமோ தவிர இவர்களுடைய பென்ச் என்று வெற்றிக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் அப்படி தன் பெயரை எழுதி இருக்க மாட்டன். காரணம் "பவித்ரா".


பவித்ராவும் வெற்றியும் ஒரே ஊர்தான். ஒரே பேருந்து நிறுத்தத்தில் தான் இருவரும் கல்லூரிப் பேருந்தை பிடிக்க வேண்டும். கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே நிறுத்தத்தில் வைத்து பவித்ராவைப் பார்த்தான் வெற்றி, இல்லை கண்களாலேயே அளவெடுத்தான் என்று தான் சொல்ல வேண்டும்!


அவள் அப்படி ஒன்றும் நிறமில்லை, மாநிறம் தான். வெற்றிக்கோ சாக்லேட் போலத் தோன்றினாள், களங்கமே இல்லாத முகம், அப்படி என்னதான் ஸ்கின்கேர் செய்கிறாளோ! என்று எண்ணிக்கொண்டான். முகத்தில் எப்போதும் ஒரு அமைதி, அக்கம் பக்கம் பேசும்போது கூட அதிர்ந்து பேசவில்லை, ஆர்ப்பாட்டமில்லாத அழகு. நல்ல உயரம், முழுவதும் "பிங்க்" நிற ஆடையில் ரோஜா மலர் போலவே தெரிந்தாள் அவன் கண்களுக்கு. தலை முதல் கால் வரை ஆராய்ந்து முடித்து பெருமூச்சு விட்டான்

அன்றிலிருந்தே வெற்றி பவித்ராவை வைத்தக்கண் விலக்காமல் பார்த்துக் கொண்டிருப்பான்


ஏற்கனவே வெற்றி பவித்ராவை சைட் அடித்துக் கொண்டிருப்பது பலருக்கும் தெரிந்திருந்த சூழலில், இப்போது அவர்கள் பென்ச்சில் இப்படி பெயர் எழுதிவிட்டோமே! என்ன ஆகப்போகிறதோ! என்று தவித்தான். ஆசிரியர் வகுப்பறைக்குள் வந்ததும் இயல்பு நிலைக்குத் திரும்பினர் அனைவரும்.


அடுத்த நாள் தேர்வின் போதும் வெற்றிக்கு அதே இருக்கை தான், அங்கே அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது

வழக்கம் போல இம்முறையும் தேர்வு எழுதாமல் நேரம் போக்கிக்கொண்டு இருந்தான், சரி நேற்று தான் எழுதி வைத்தது இன்னும் இருக்கிறதா பார்ப்போம் என்று விடைத்தாளைக் கொஞ்சம் நகர்த்தினான். அங்கே அவன் பெயருக்கு மேலே "ஸ்டுப்பிட்" என்று எழுதி இருந்தது. அதைப் படித்ததும் வெற்றிக்குக் கோபம் கொப்பளித்தது, ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். "அந்த இருக்கையில் அமரும் நால்வரில் இதைச் செய்தது யாராக இருக்கும் என்று எண்ணிப் பார்த்தான், "பவித்ரா இப்படிச் செய்யக் கூடியவள் அல்ல. மிகவும் நல்லப் பெண், ஒருவேளை அவள் தான் செய்திருப்பாளோ? ஏன் இருக்காது, நாம் பார்ப்பது அவளுக்கும் தெரியும். வேண்டுமென்றே தான் இப்படி எழுதி இருக்கிறாள்!, எதாவது செய்தாக வேண்டும்" என்று முடிவு செய்தான்


சில வினாடியில் அவன் முகம் மலர்ந்தது, இதழின் ஓரத்தில் முறுவல் பூத்தது, ஆம் அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்து விட்டான். "ஸ்டுப்பிட்" என்று எழுதி இருந்ததல்லவா? அதற்கு முன்பு "ஸ்வீட்" என்று எழுதி கடைசியில் ஒரு கேள்விக்குறியும் இட்டு வைத்தான்!


முழுவதும் பார்பதற்கு அது "ஸ்வீட் ஸ்டுப்பிட்?" எனக் கேட்பது போல் இருந்தது.




Saturday, August 19, 2017

சனியின் கனிவு

சனியின் கனிவு

           அலுவல் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன், வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்த போது கைப்பேசி மணி அடித்தது, அழைப்பை ஏற்று பேசினேன். என்னுடைய நண்பன் தான். "டேய், என்னடா ஆச்சு?" என்றான். நடந்தவற்றை விவரித்தேன். நடந்தது என்னவென்றால்...

சில நாட்களுக்கு முன்..

           என்னுடைய சித்தப்பா என் தந்தைக்கு அழைத்துப் பேசினார். என்னுடைய ஜாதகத்தை அவ்வூர் ஜோதிடரிடம் காண்பித்து கேட்டிருக்கிறார்கள். ஜாதகத்தை கூர்ந்து பார்த்த ஜோதிடர். "இரண்டாம் வீட்டு சனி தான் திருமணத்திற்கு தடை போட்டுக் கொண்டிருக்கின்றார்" என்றும் "சனி ப்ரீத்தி பூஜை செய்துவிட்டால் உடனே திருமணம் நடந்துவிடும்" என்றும் கூறியாதாகவும், மேலும் "இரண்டில் சனி இருக்கும் ஜாதகம் ஆகையால் இரண்டில் சனி இருக்கும் ஜாதகியுடன் தான் திருமணம் நடைபெறும்" என்றும் கூறியதாக தந்தையிடம் தெரிவித்தார். நானோ அதெல்லாம் எதற்கு எனக்கேட்டு மறுத்துவிட்டேன். "நடக்கும் காலம் வந்தால் தானாக நடந்துவிடும் " சாகப்போகும் கிழவியை எதற்கு விஷம் வைத்து கொல்ல வேண்டும்" என்று நையாண்டி செய்து மகிழ்ந்தேன். அப்பாவும் அலட்டிக் கொள்ளவில்லை, அப்படியே விட்டு விட்டார். சில நாட்களில் ஒரு ஜாதகம் வந்தது, ஜாதகம் மட்டும் தான். புகைப்படம் எதுவும் வரவில்லை. ஜாதகத்தை பார்த்ததும் நான் முதலில் பார்த்தது இரண்டாம் வீட்டைத் தான். இரண்டில் சனி!!

           இரண்டாம் வீட்டில் சனி என்றதும் அப்பா அம்மாவுக்கு முகத்தில் முறுவல். அப்போது நான் கூறினேன். "பார்த்தீர்களா, இதற்கு போய் எதற்கு பூஜையெல்லாம் செய்ய வேண்டும், நேரம் வரும்போது ஜாதகம் கிடைத்து விட்டது" என்றேன். உடனே அப்பா, பெண் வீட்டிற்கு அழைத்தார், பெண்ணின் தந்தை தான் பேசினார், வழக்கமான சில தகவல்களை பகிர்ந்துகொண்டனர் இருவரும். மறுநாள் பெண்ணின் அப்பா எங்கள் வீட்டிற்கு வந்தார். வீட்டையும் என்னையும் பார்த்துவிட்டு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். பிறகு கிளம்பும் போது அப்பா அவரிடம் பெண்ணின் புகைப்படம் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு அவர், "இல்லை நான் எடுத்து வரவில்லை, சும்மா பார்க்கத்தான் வந்தேன்" என்று சொல்லி சென்றுவிட்டார்.

           அவர் போன பிறகு "இவர் சென்றதைப் பார்த்தால் மறுத்து விடுவார்கள் போல் தெரிகிறது" என்றார் அப்பா.  பேசிக்கொண்டிருக்கும் போதே அவரிடம் இருந்து அழைப்பு வந்தது, "எனக்கு பிடித்திருக்கிறது நல்ல நாள் பார்த்து வீட்டிற்கு வாருங்கள்" என்றார். முதலில் நான் "நீங்கள் மட்டும் போய் பார்த்து வாருங்கள், நான் வரவில்லை" என்றேன். அப்பாவும் சம்மதம் கூறினார். ஆனால், பெண்ணின் அப்பாவோ, "எதற்கு இழுத்துக் கொண்டே போக வேண்டும், மாப்பிள்ளையை கூட்டி வந்தால் ஒரு வேலை முடிந்துவிடும் அல்லவா? நீங்கள் பார்த்து என்ன ஆகப்போகிறது பெண்ணும் பிள்ளையும் பார்த்துத் தானே முடிவு செய்ய வேண்டும் " என்றார். நானோ சிறிது நேரம் யோசித்தேன், பிறகு சரி வருகிறேன் என ஒப்புக் கொண்டேன்.

           அடுத்த நாள் நண்பனிடம் இதைக் கூறினேன். அவன் தான் ஃபாஸ்ட் ட்ராக் டாக்ஸியை பரிந்துரைத்தான். ஃபாஸ்ட் ட்ராக்கை அழைத்து வண்டிக்கு பேசினேன். மூன்று மணி நேரத்திற்கு 840 ரூபாய் என்றனர். சரி என்று மாலை வரும்படி முகவரி கொடுத்தேன். அன்று மாலை அனைவரும் கிளம்பி ஆயத்தமானோம் வண்டி வருவதற்காக காத்திருந்தோம். நேரம் தான் ஆனதே தவிர வண்டி வரவில்லை, ஓட்டுனருக்கு அழைத்து கேட்டேன். வழியில் வண்டி பழுதாகி விட்டதென்றும் மாற்று வண்டிக்கு ஏற்பாடு செய்தாகி விட்டதென்றும் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடும் என்றும் கூறினார். வண்டிப் பழுதானதில் அப்பாவுக்கு கொஞ்சம் மனக்கிலேசம், ஏதோ அபசகுனம் போல் தோன்றியது. இருப்பினும் மாற்று வண்டி வந்ததும் அனைவரும் ஏறி பெண் வீட்டிற்குச் சென்றோம்.

           புறப்பட தாமதம் ஆனாலும் குறித்த நேரத்தில் வீட்டிற்கு சென்றோம். இது தான் முதல்முறை ஆதலால் எனக்கு என்னவோ போல இருந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு பெண்ணை அழைத்து வரச் சொன்னார்கள். கூச்சமா ஆர்வமா தெரியவில்லை, ஒரு உணர்வு என்னை பிடித்துக் கொண்டது. பெண் வந்ததும் எல்லா உணர்வும் போய் ஒரு விடுதலை உணர்வு ஏற்பட்டது. பெண் அழகாகத்தான் இருந்தாள் எனினும் கொஞ்சம் குண்டாக இருந்ததால் எனக்கு பிடிக்கவில்லை. பிறகு அங்கு நடந்தவற்றில் நான் ஆர்வம் காட்டவில்லை, என்னுடைய கவனத்தை என் கையில் இருந்த தட்டில் திருப்பினேன். ஆம், எனக்கு ஒரு தட்டில் வைத்து கொஞ்சம் மிக்சரும் இனிப்பும் கொடுத்திருந்தார்கள், கொஞ்சமும் மிச்சம் இன்றி முழுவதும் சுவைத்து சாப்பிட்டேன். அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினோம்.

           வீட்டிற்கு வந்ததும் "என்ன டா உனக்கு பிடித்திருக்கிறதா?" என்று அப்பா கேட்டார். கோபமாக பார்த்தேன். அப்பா சிரித்தார். "சரி விடு அவர் முன்னரே புகைப்படத்தை காண்பித்திருந்தால் முதலிலேயே சொல்லி இருக்கலாம்" என்றார். "இனி எங்கும் நான் வரமாட்டேன், அவர் எப்படி தனியே வந்து பார்த்து விட்டுச் சென்றார், அது போல நீயும் சென்று பார்த்திருக்க வேண்டும்" என்றேன். "சரி விடு டா" என்றார். பிறகு அக்காவுக்கு அழைத்து நடந்தவற்றை கூறினேன். அக்காவும் "இதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம். போய் பார்த்து விட்டால் சம்மதம் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று தேற்றினாள். மறுநாள் காலை பெண்ணின் தந்தை அப்பாவுக்கு அழைத்து பேசினார், "மகன் வேண்டாம் என்று சொல்லிவிட்டான்" என்று சுருக்கமாக சொல்லி முடித்தார் அப்பா.

           நடந்த இந்த நிகழ்வுகளைத் தான் நண்பனிடம் பேசியில் பகிர்ந்து கொண்டேன். பிறகு வீட்டிற்கு வந்ததும் அப்பா என்னிடம் "இந்தவாரம் ஊருக்கு போக வேண்டும்" என்றார். "ஊருக்கா ? எந்த ஊருக்கு?" எனக்கேட்டேன். "சேலம் போகவேண்டும். சித்தப்பா சொன்னது போலவே, முடிந்துவிடும் என்று நினைத்த இடமும் முடியவில்லை, எனக்கு என்னவோ அங்கே போய் அந்த ஜோதிடரிடம் பூஜை செய்தால், எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்று தோன்றுகிறது" என்றார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அக்காவிடம் இருந்து அழைப்பு வந்தது.

           அக்கா வீட்டில் இப்போது தான் புதிதாக ஒரு "கார்" வாங்கி இருந்தார்கள். "லாங் ட்ரைவ்" போக வேண்டும் என்று சில நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். பேசியை அப்பா எடுத்ததும் "அப்பா, நாங்கள் இந்த வாரம் சேலம் போகலாம் என்றிருக்கிறோம், சித்தப்பா வீட்டிற்கு" என்றாள். அப்பாவுக்கு நெஞ்சம் "திக்" என்றது, "ஏன் என்ன திடீரென்று அங்கே?" எனக்கேட்டார், அதற்கு அக்கா "லாங் ட்ரைவ் போக திட்டம் போட்டுக்கொண்டிருந்தோம் அல்லவா? அதான் சித்தப்பா வீட்டிற்கு சென்று அங்கிருந்து அப்படியே ஏற்காடு செல்லலாம் என்றிருக்கிறோம்" என்றாள். உடனே அப்பா "நாங்களும் இந்த வாரம் அங்கு தான் செல்லலாம் என்றிருக்கிறோம்" என்றார் பூஜையை பற்றி எடுத்துக்கூறி. விஷயத்தை கேட்டதும் அக்காவும் "சரி நாங்களும் வருகிறோம் பூஜைக்கு" என்று கூறி அழைப்பை வைத்தாள். வைத்ததும் அப்பா எங்களிடம் "பார்த்தாயா, நாம் கூறாமலேயே அக்காவும் சேலம் வரத்திட்டம் போட்டிருக்கிறாள், இதில் ஏதோ தெய்வ செயல் இருக்கிறது" என்று தான் அடைந்த "திக்" உணர்வுக்கு விளக்கம் கொடுத்தார்.

           சித்தப்பா வீட்டில், அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி, வெகு நாட்களுக்கு பிறகு நாங்கள் அனைவரும் குடும்பமாக அங்கு சென்றதில். முதலில் மாலை போதில் நாங்கள் சென்றோம் பிறகு இரவு அக்காவும் குடும்பத்துடன் வந்து சேர்ந்தாள் அவர்களுடைய புதிய காரில். ஜோதிடருக்கு சித்தப்பா அழைத்து மறுநாள் சனிக்கிழமை காலையே அனைவரும் வந்துவிடுவதாகக் கூறி பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யச் சொன்னார். இரவு சாப்பிட்டு முடித்ததும் மொட்டை மாடிக்குச் சென்று அனைவரும் சென்று படுத்தோம். மாடியில் நல்ல காற்று வீசிக்கொண்டிருந்தது, படுத்துக் கொண்டு அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள், என்னுடைய திருமணத்தைப் பற்றித் தான். அப்போது சித்தப்பா அப்பாவிடம் அந்த ஜோதிடரைப் பற்றி பெருமைபட கூறினார். "இதுபோலத்தான் நம்ம பாலாஜிக்கும் இரண்டில் சனி இருந்து திருமணமே நடக்காமல் இருந்தது, பிறகு இவர் தான் சனிப்ரீத்தி செய்துவைத்தார். ஒரே வாரத்தில் முடிந்துவிட்டது" என்றார். எனக்கோ பயணக்களைப்பு, இதமாக காற்று வீசிக்கொண்டிருந்தது, விட்டால் நன்றாக தூங்குவேன், ஆனால் அனைவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். அப்போது நல்ல வேளையாக சித்தி, பேசியது போதும் அனைவரும் உறங்குங்கள் காலை சீக்கிரமே எழுந்து கிளம்ப வேண்டும்" என்றார். அப்படியே அனைவரும் பேச்சை நிறுத்தி உறங்கச் சென்றனர்.

           மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து அனைவரும் குளித்து முடித்து ஜோதிடர் சொல்லியிருந்த கோவிலுக்குச் சென்றோம். அது ஒரு சிறு ஆஞ்சநேயர் கோவில். அங்கே ஜோதிடர் எங்களை வரவேற்றார். சனியை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஆஞ்சநேயருக்கு உண்டு என்றார். பூஜை துவங்கியது நானும் அமர்ந்தேன். ஒரு அரை மணி நேரம் நடந்திருக்கும். பூஜை முடிந்ததும் ஜோதிடர் அப்பாவிடம் "ஒரு மாதம் நேரம் கொடுங்கள், அதற்குள் திருமணம் முடிந்துவிடும்" என்றார். சரியென்று சொல்லி அங்கிருந்து அனைவரும் விடை பெற்று சித்தப்பா வீட்டிற்கு திரும்பினோம். வீட்டிற்கு வந்ததும் ஏற்காடு பற்றி அக்கா கேட்டாள். ஆனால் சித்தப்பாவோ "இப்போது கிளம்பினால் முடியாது, காலையே கிளம்பியிருந்தால் தான் இரவுக்குள் மலையேறலாம்" என்றார். இப்போது என்ன செய்வது என்று யோசித்தோம். அப்போது சித்தி அருகே இருக்கும் வினாயகா மிஷன் மலைகோவில் பற்றி கூறினார். அங்கே 1008 சிவலிங்கம், ராமர், வெங்கடாஜலபதி மற்றும் இன்னும் நிறைய சந்நிதிகள் இருப்பதாகவும் மாலை அங்கே செல்வோம் என்றும் கூறினார். அனைவரும் இதற்கு இசைவு தெரிவித்தனர். பிறகு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சற்று ஓய்வு எடுத்தோம்.

           மாலை அக்கோவிலுக்குச் சென்றோம், அங்கே இருந்த அனைத்து சுவாமி சந்நிதிகளுக்கும் சென்று விட்டு கடைசியாக ஒரு பிள்ளையார் சிலை அருகில் சென்றோம் அங்கே இருந்தவர், மிகவும் சக்திவாய்ந்த பிள்ளையார், நினைத்து நடக்கும் என்றார். உடனே அனைவரும் என்னை சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள சொன்னார்கள். நானும் அப்படியே வேண்டிக்கொண்டேன். இரவு வீடு திரும்பினோம். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை அனைவரும் புறப்படத் தயாரானோம். "ஏன் அதற்குள்? நாளை புறப்படலாமே" என்றனர் சித்தப்பாவும் சித்தியும். "இப்போது புறப்பட்டால் தான் இரவுக்குள் வீடு போக முடியும், நாளை அலுவலகம் போக வேண்டும்" என்று கூறி அனைவரும் புறப்பட்டோம் அக்காவின் காரில். நாங்கள் வேலூரில் இறங்கிக்கொண்டோம். அவர்கள் நேரே ஓசூருக்கு சென்றனர். வேலூரில் இருந்து நாங்கள் தாம்பரம் வந்தோம். வீடு வந்து சேர இரவு ஆகிவிட்டது. வீட்டிற்கு வந்ததும் அப்பா சித்தப்பாவுக்கு அழைத்து இப்போது தான் வந்து சேர்ந்தோம் என்று கூரினார். அப்போது சித்தப்பா "ஜோதிடர் அப்படித்தான் சொல்வார், ஒரு மாதம் ஆகும் என்று, நீ ஒன்றும் கவலைப்படாதே அண்ணா, ஒரே வாரத்தில் முடிந்துவிடும் பார்" என்றார். இரவு உணவு எதுவும் வேண்டாம் என்று சொல்லி படுத்துவிட்டேன். அனைவருமே டீ குடித்து விட்டு படுத்தார்கள். அவ்வளவு களைப்பு! மறுநாள் திங்கள் கிழமை அலுவலகம் புறப்பட்டுச் சென்றேன். வீட்டிற்கு வந்ததும் ஒரு இன்ப அதிர்ச்சி!!!

           அப்போது தான் உடைமாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அப்பாவுக்கு ஒரு அழைப்பு வந்தது, கும்பகோனத்தில் இருந்து பேசுவதாக கூறினார்கள், அப்பாவுக்கு யார் என்று தெரியவில்லை, "என்ன மறந்து விட்டீர்களா? ஜாதகம் கொடுத்திருந்தோமே, நாங்கள் பார்த்துவிட்டோம், பொருத்தமாக இருக்கிறது, புகைப்படம் அனுப்பினால் முடிவு செய்துவிடலாம்" என்றதும் அப்பாவும் யாரென தெரியவில்லை என்றாலும் புகைப்படம் அனுப்ப வேண்டிய கைப்பேசி எண்ணை வாங்கிக் கொண்டு அழைப்பை துண்டித்தார். என்னிடம் எண் கொடுத்து புகைப்படம் அனுப்பச் சொன்னார். நானும் புகைப்படமும் ஜாதகமும் அனுப்பிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். அப்போது அப்பா "என்னடா இது, சனிப்ரீத்தி பூஜை அதற்குள் வேலை செய்யத் துவங்கி விட்டதா" என்று சிரித்தார்.

           சிறிது நேரத்தில் என்னுடைய கைப்பேசியில் வாட்சப் ஒலி அடித்தது, எடுத்துப் பார்த்தேன். ஜாதகமும் புகைப்படமும் பதிலுக்கு அனுப்பி இருந்தார்கள். முதலில் புகைப்படத்தை தரவிறக்கினேன். தரவிறக்க அளவி புகைப்படத்தின் மீது சுழன்று கொண்டிருந்தது. இதோ முடியப் போகிறது, உள்ளே ஏனோ படபடப்பு, "சனீஸ்வரா, பெண் எனக்கு பிடித்த மாதிரி இருக்கனும்" என வேண்டிக்கொண்டேன். தரவிறக்கம் முழுதும் முடிந்து புகைப்படம் தெரிந்தது, அழகான ஒரு பெண்ணின் முகம், பார்த்ததும் உள்ளம் படபடப்பை மறந்து அமைதியானது. போரில் வெற்றி அடைந்த வீரனைப்போல, தேடிய பொருளை கண்டடைந்தவன் போல, ஒரு மகிழ்ச்சி என்னை ஆட்கொண்டது. புகைப்படத்தை அப்பா அம்மாவுக்கு காட்டினேன். பார்த்துவிட்டு பிடித்திருக்கிறதா என்று கேட்டார் அப்பா, "ஃபோட்டோ ஓகே, நேரில் சென்று பார்த்து விட்டு வா, அவர்களுக்கும் பிடித்திருக்கிறதா என்று கேட்டுக்கொள்" என்றேன்.

           இரவு சாப்பிடும் போது "ஜாதகத்தையும் புகைப்படத்தையும் அக்காவுக்கும் அனுப்பிவிடு" என்றார் அம்மா, "சாப்பிட்டு முடித்து அனுப்புகிறேன்" என்றேன். சாப்பிட்டு முடித்ததும் படுக்கைக்கு சென்றேன். பேசியை எடுத்து பெண்ணின் புகைப்படத்தையும் ஜாதகத்தையும் அக்காவுக்கு வாட்சப்பில் அனுப்பினேன். பார்த்துவிட்டு, "ஓகே தான் இல்ல?" என்றாள். நானும் "பிக் ஓகே தான், நேரில் சென்று பார்க்க வேண்டும்" என்றேன். பிறகு சிறிது நேரம் அக்காவிடம் பேசிவிட்டு படுக்கையில் சாய்ந்தேன். ஏனோ தெரியவில்லை மீண்டும் பார்க்க வேண்டும் போல் தோன்றியது, பேசியை எடுத்து பெண்ணின் புகைப்படத்தை பார்த்தேன். சனீஸ்வரன் என்மீது காட்டிய கனிவு, என்னவென்று சொல்ல. ஆஹா!! என்ன அழகு, இருவாட்சி மலர் போல இரண்டு முட்டை கண்கள், என்னை விழுங்கி விடுவது போல் பார்த்தன, கண்களின் வசீகரத்தில் இருந்து என்னை விடுவித்து கொள்ள சிறிது நேரம் ஆனது, சற்றே கீழே பார்வையை செலுத்தினேன். அய்யோ! என்ன நேர்த்தியான மூக்கு, கூறிய மூக்கு வேல் போல என் உள்ளத்தை தைத்தது. கொழுத்த கண்ணங்கள் லட்டு போல இருந்தது, மெல்லிய உதடுகள் உயிரையே குடிக்கத் துடிப்பது போல் தோன்றியது. எண்ணங்கள் அலைபாய்வது புரிந்தது, சட்டென்று பேசியை அனைத்து தலையனையில் முகம் புதைத்தேன்.

Sunday, July 23, 2017


2. பெண்டாட்டி தாசன்


              காலையில் எழுந்ததும் முதல்வேலையாக அலைப்பேசியை எடுத்து வாட்சப்பை திறந்தேன். முழுக்க வாழ்த்துச் செய்திகள். ஆம், ஆவனி எட்டு, இன்றெனக்கு பிறந்தநாள். எல்லா வாழ்த்துக்கும் நன்றி தெரிவித்து விட்டு கடைசியாக அக்காவின் வாழ்த்துச் செய்தியை பார்த்தேன். வாழ்த்தே ஒரு வகையாக இருந்தது. "இந்த ஆண்டுக்குள் உனக்கு திருமணம் நடந்துவிடும்" என்றும் "இனி எல்லாமே உனக்கு நல்லதாகவே தான் நடக்கும்" என்றும் வாழ்த்து அனுப்பி இருந்தாள். "இது என்ன முன்னுக்கு பின் முரணாக இப்படி ஒரு வாழ்த்து அனுப்பி இருக்கிறாள் அக்கா?, திருமணம் நடந்துவிட்டால், பிறகு நடக்கும் நல்லதும் நாசமாக அல்லவா போகும்" என நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். 

              ஆம், மூன்று மாதங்களுக்கு முன் தனக்கு குழந்தை பிறந்ததும் எனக்கு பெண் பார்க்கும் வேலையை துவங்கச்சொல்லி, இனியும் நேரம் கடத்தினால் பிறகு இவனுக்கு திருமணமே நடக்காது என்றொரு குண்டை போட்டு அப்பா அம்மாவை அதிரிரச் செய்தாள் அக்கா. "நானா வேண்டாம் என்கிறேன், இவன் தான் இப்போது வேண்டாம் என்கிறான்" என்றார் அப்பா. நான் திருமணம் செய்யாமல் எவ்வித பொறுப்புமின்றி  மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதில் அக்காவுக்கு கொஞ்சம் வயிற்றெரிச்சல். எப்போது வீட்டுக்கு வந்தாலும் என்னுடைய திருமணப் பேச்சு தான். இம்முறை குழந்தை பிறந்த போது வந்திருந்த உறவினர்களும் திருமணப் பேச்சை எடுத்ததால், எப்படியும் என்னை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று உறுதியுடன் இருந்தாள்.

              எனக்கோ, என்ன தான் அதை நினைத்தால் சற்று குறுகுறுப்பாக இருந்தாலும் இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை, வேண்டாம் என்று வழக்கமான பதிலை தந்தேன். "இப்போது தொடங்கினால் தான் ஓராண்டுக்குள் முடியும்" என்று மேலும் உறுதியுடன் கூறினாள் அக்கா, அதற்கு நானோ "எனக்கெல்லாம் அப்படி ஆகாது, எந்த எதிர்பார்ப்பும் இல்லை, ஆகையால் முதலில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து கொள்வேன்" என்றும் "இப்போது பார்த்தால், இப்போதே முடிந்துவிடும், என்னை விட வயதில் பெரிய என் நண்பர்களுக்கே இன்னும் திருமணம் ஆகவில்லை, அதனால் கொஞ்சம் காலம் ஆகட்டும்" என்றேன். ஆனால் அக்கா விடுவதாக இல்லை, இம்முறை மாமாவிடம் வேறு மாட்டிவிட்டாள், எப்போதும் அவர் இது பற்றி பேச மாட்டார். ஆனால் இம்முறை அவரும் என்னிடம் கேட்டார். நானோ எனக்கெதற்கு இப்போது திருமணம் என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில், என்னால் எதுவும் பேச இயலவில்லை. 

              "எதற்கென்றால் என்ன, இதற்கெல்லாமா காரணம் வேண்டும், வாழைப்பழம் பழுத்தால் உரித்து சாப்பிட வேண்டியது தான்" என்றார். அதிர்ந்து போனேன். "அதெல்லாம் இல்லை" என்றேன், இதழ்களில் மெல்லிய சிரிப்போடு. பிறகு அப்பாவிடம் "மாமா, இவன் இப்படி தான் சொல்வான், நீங்கள் பெண் பார்க்கும் வேலையை துவங்குங்கள், அப்போது தான் அவனுக்கும் அதில் ஒரு ஆர்வம் வரும்" என்றார். மாமா சொன்னதும் சரிதான் என்னும் முடிவுக்கு வந்து விட்டார் அப்பா, "சரி பார்த்துவிடுவோம்" என்றார். என்னை சிக்க வைத்துவிட்டதில் பெருத்த மகிழ்ச்சி அக்காவுக்கு. அந்த மகிழ்ச்சியுடனே ஊருக்கு கிளம்பிச் சென்றாள்.

              அக்கா ஊருக்கு கிளம்பிச் சென்றதும் உறவினர்களிடத்தில் எல்லாம் சொல்லி வைத்தார்கள், எனக்கு பெண் பார்க்கும் செய்தியை. சிறிது நாட்களில் ஒரு பெண் வீட்டில் இருந்து அப்பாவுக்கு அழைப்பு வந்தது, பெண்ணின் தந்தையுடன் அப்பா அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த நேரம் எனக்கு ஏதோ செய்தது. படபடப்புடன் அவர்களின் அலைப்பேசி உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தேன், முதலில் என்னை பற்றிய விவரங்களை கொடுத்தார். பிறகு ஜாதகத்தையும் புகைப்படத்தையும் அனுப்பி வைப்பதாகவும் பதிலுக்கு தாங்களும் பெண்ணின் புகைப்படமும் ஜாதகமும் அனுப்பி வையுங்கள் என்றும், கூறி முடித்தார்.

              ஒரு காகிதமும் பேனாவும் கொடுத்து என்னுடைய ஜாதகத்தை அழகாக எழுதச் சொன்னார் அப்பா. நானோ அதெல்லாம் வேண்டாம் என்று என்னுடைய கைப்பேசியில் நோட்ஸ் அப்ளிகேஷனில் ஜாதகத்தை எழுதி அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து என்னுடைய புகைப்படத்தையும் - ஆம், சற்று அழகாக இருக்கும் புகைப்படத்தை தேடி எடுத்து பெண்ணின் தந்தைக்கு வாட்சப்பில் அனுப்பி வைத்தேன். சிறிது நேரத்தில் கைப்பேசியில் மணி அடித்தது. அப்பாவும் அம்மாவும் மிகவும் ஆர்வம் காட்டினார்கள், நான் ஒரு வித பதற்றத்துடன் பேசியை எடுத்து வாட்சப்பை திறந்தேன். பதற்றம் நீங்கி நிம்மதியுடன் மூச்சு விட்டேன். 

              மிகவும் குண்டாக ஒரு பெண்ணின் புகைப்படம். பார்த்ததும் என்ன சொல்வதென்று தெரியாமல் அப்பாவிடம் கொடுத்தேன், அவர் என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன், அவருடைய டேஸ்ட் எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?. அப்பாவும் அம்மாவும் வாங்கி பார்த்து விட்டு எதுவும் சொல்லவில்லை. "சரி, பிறகு என்ன ஜோசியரிடம் போய் பொருத்தம் பார்க்கலாமா" என்றார். பேரதிர்ச்சிக்குள்ளானேன். இனியும் அமைதியாக இருந்தால் எல்லாம் வீணாக போய்விடும் என்று முடிவு செய்து என்னுடைய விருப்பத்தை கூறினேன்.

              "ஒல்லியான உயரமான பெண்ணைத்தான் நான் திருமணம் செய்வேன் என்றும் எப்படி இருந்தாலும் சரியென சொல்வேன் என்று நினைக்க வேண்டாம்" என்றும் கோபமாக கூறினேன். " ம்ம்ம், இப்படி சொன்னால் தானே தெரியும். அப்படியே பார்த்துவிடுவோம், இந்த பெண் வேண்டாம் என்றால் விட்டு விடுவோம் " என்று சாதாரனமாக கூறினார் அப்பா. நானோ "அதெப்படி ஜாதகம் பார்க்கலாமா? எனக்கேட்கலாம், இந்த பெண் பார்ப்பதற்கு என்னை விட பெரிய பெண்ணாக தோன்றுகிறாள், இருந்தும் ஜாதகம் பார்க்க முடிவெடுத்தால் என்ன நியாயம்" என்றேன் கடும் கோபத்துடன். 

              "டேய், புகைப்படமும்  ஜாதகமும் வந்த பிறகு ஜோசியரிடம் போய் காட்டி ஜாதகப் பொருத்தம் பார்ப்பது தான் உலக வழக்கம்" என்றார்.  "அதெல்லாம் ஒன்றும் இல்லை, முதலில் என்னைக் கேட்க வேண்டும், எனக்கு பிடித்திருந்தால் தான் ஜோசியரிடம் போக வேண்டும்" என்றும் "நான் இந்த பெண்ணை ரிஜக்ட் செய்கிறேன்" என்றும் சீற்றத்துடன் கூறினேன். அப்பாவின் டேஸ்ட் சரி யில்லை, ஏதோ ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விடுவார் எனும் பயத்தில் நான் கோபமடைந்து கூறினேன். ஆனால் அப்பாவோ, "சரி விடு, இதற்கு ஏன் கத்துகிறாய்" , என்று கூலாக கூறிவிட்டு நகர்ந்தார்.

              மேற்சொன்ன நிகழ்ச்சி நடந்தது முதல் இன்று வரை நிறைய பெண்களை நான் ரிஜக்ட் செய்து விட்டேன், இப்போது அப்பாவுக்கே புரிந்து விட்டது என்னுடைய டேஸ்ட், அவரே பார்த்ததும் முடிவு செய்து விடுகிறார், "என்ன ரிஜக்டடா" என்றும் கேட்கிறார். மூன்று மாதங்களாக இப்படியே தான் நடக்கிறது, அதனால் நான் வருத்தத்தில் இருப்பேன் என்று நினைத்தாளோ என்னவோ இப்படி ஒரு வாழ்த்து அனுப்பி இருக்கிறாள் அக்கா. உண்மையில் நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை, தள்ளிப்போவதில் மகிழ்ச்சியே.

              வாட்சப் வாழ்த்தை படித்துக் கொண்டிருக்கும் போதே அக்காவிடம் இருந்து அழைப்பு வந்தது, நான் பேசாமல் அம்மாவிடம் கொடுத்து "உன் பொண்ணு தான் பேசுறா, பேசு" என்றேன். அம்மாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அப்பாவிடம் பேசினாள் அக்கா. "இப்படியே இருந்தாள் எப்படி, சிவா ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரிடம் காண்பித்து எப்போது திருமணம் நடக்கும் என்று விசாரியுங்கள்" என்று கூறினாள். அதுவும் சரிதான் என்றும் "நாமே பார்த்துக் கொண்டிருக்கிறோம், இவனுக்கு திருமண யோகம் வந்துவிட்டதா என்பது கூட தெரியவில்லை, ஆகவே ஜாதகம் பார்க்கத்தான் வேண்டும்" என்றும் முடிவுக்கு வந்தார் அப்பா.

              இரண்டு நாட்கள் கழித்து நானும் அப்பாவும் என்னுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஜோதிடரிடம் சென்றோம். அப்பாவுக்கு இதிலெல்லாம் அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது, எனக்கோ சுத்தமாக இல்லை. உள்ளே நுழைந்ததும் வணக்கம் கூறினார் ஜோதிடர், பதிலுக்கு நானும் வணங்கினேன். அப்பாவைப் பார்த்து "நீங்கள் வந்த நேரம் 5.20, இந்த நேரத்தில் இன்னின்ன கோள்கள் இன்னின்ன இடத்தில் இருக்கின்றன" என்று ஜோதிட சொற்களில் கூறி, "ஆகவே பிரவேச  நேரக் கணிப்பு படி நீங்கள் இப்போது தம்பியின் வேலைவாய்ப்பும் குடும்ப நிலையும் பற்றி அறிந்துகொள்ள வந்திருக்கிறீர்கள்" என்றார். எனக்கோ குபுக்கென்று சிரிப்பு வந்தது, அடக்கிக் கொண்டேன்.

              சும்மா இருந்திருந்தால் நாமே கூறியிருப்போமே, இவர் தேவையில்லாமல் பிரவேச நேரத்தை கணித்து இப்படி மொக்கை வாங்கி விட்டாரே என்று நினைத்துக் கொண்டு அப்பாவை நக்கல் பார்வை ஒன்று பார்த்தேன். அப்பா எதுவும் சொல்லவில்லை, பிறகும் கூட ஜோதிடர் எங்களிடம் எதை பற்றி அறிய வந்திருக்கிறோம் என்று கேடகாமல் அவரே தொடர்ந்தார். எதிரே இருந்த பெரிய பலகையில் என்னுடைய ஜாதகத்தை எழுதி "இது தான் லக்னம், அதற்கு அடுத்து இரண்டாவதாக இருக்கும் கட்டம் குடும்பஸ்தானம்" என்று வரிசையாக பன்னிரண்டு கட்டங்களுக்கும் ஒரு பெயரைச்சொல்லி ஜோதிட வகுப்பு எடுக்க தொடங்கினார். ஏழாம் கட்டத்தை காட்டி, "இது தான் திருமணஸ்தானம்" என்றதும் கொஞ்சம் கவனம் செலுத்தினேன். ஏழாம் கட்டத்தின் அதிபதி இருக்கும் நிலை, கட்டத்தில் இருக்கும் கிரகம் மற்றும் கட்டம் பெறும் பார்வை என்று ஏதேதோ சொல்லி விட்டு, அதன் பலங்களை கூறத்தொடங்கினார். தம்பி இரண்டு வருடத்திற்கு முன் காதல் வலையில் விழுந்துவிட்டார் என்றும் காதல் திருமணம் தான் இவருக்கு நடக்கும் என்றும் அப்படித்தான் வரம் வாங்கி வந்திருக்கிறார் என்றார். அப்பா என்பக்கம் முகத்தை திருப்பி மேலும் கீழும் பார்த்தார். நான் ஒன்றும் சொல்லவில்லை, ஜோதிடர் பக்கம் பார்வையை திருப்பினேன்.

              பிறகு ஏனைய கட்டங்களின் நிலையையும் பலங்களையும் கூறி முடித்து, சிக்கலான பாடத்தை சுலபமாக சொல்லிக் கொடுத்து முடித்த பள்ளி ஆசிரியரைப் போல பெருமிதத்துடன் இருக்கையில் வந்து அமர்ந்தார். "நான் தான் பேசிக்கொண்டே இருக்கிறேன், நீங்கள் எதுவுமே கேட்கவில்லையே என்றார். அப்போது அப்பா, "நங்கள் வந்ததே திருமணம் பற்றி அறியத்தான், ஆனால் நீங்களோ முதலில் வந்ததும் பிரவேச கணிப்பில், வேலைவாய்ப்பும் குடும்பமும் என்றீர்கள்" என்றார். உடனே இடைமறித்த ஜோதிடர் "நான் தான் குடும்பம் என்று சொன்னேனே குடும்பத்தில் தான் திருமணமும் அடக்கம்" என்றார் பதற்றத்துடன். அப்பா அமைதி ஆனார். அப்போது நான் பேச்சை தொடர்ந்தேன். "இல்லை இல்லை, நீங்கள் சொன்னபடி வேலைவாய்ப்பு லக்னத்தில் இருந்து பத்தாம் ஸ்தானம், குடும்பம் இரண்டாம் ஸ்தானம், நாங்கள் வந்தது ஏழாம் ஸ்தானம் ஆகிய திருமணத்தை பற்றி அறிந்து கொள்ள" என்று கிடிக்கிப்பிடியில் சிக்க வைத்தேன். பேரதிர்ச்சிக்கு உள்ளானார் ஜோதிடர்.

              ஜோதிடர் முகத்தில் ஈயாடியது, அவரை சிக்கவைத்த மகிழ்ச்சி என் முகத்தில் முறுவலாய் பூத்தது. இவ்வளவு விளக்கமாக பாடம் எடுத்து மொக்கை போட்டது எவ்வளவு பெரிய பிழை என்பதை தற்போது உணர்ந்திருப்பார் ஜோதிடர் என்று நினைத்தேன். ஆனால் அவரோ மீண்டும் எழுந்து பலகையின் அருகில் சென்று என்னை வாயடைக்கச் செய்தார். இது என்னடா இது, மீண்டும் மொக்கை போட எழுந்துவிட்டாரே என்று மிரண்டு போனேன். "இல்லை தம்பி திருமணம் என்று வரும் போது வெறுமனே ஏழாம் வீட்டை மட்டும் பார்க்கக்கூடாது, அதனுடன் குடும்பத்தைக் குறிக்கும் இரண்டாம் வீட்டையும், கூடவே பன்னிரண்டாம் வீடான அயன சயன வீட்டையும் சேர்த்தே தான் பார்க்க வேண்டும்" என்று சமாளித்தார். 

              "முதலில் நான் சொன்னது மேலோட்டமாக, இப்போது ஏழாம் வீட்டின் பிரத்தேய பலங்களை கூறுகிறேன் கேளுங்கள்" என்று தொடர்ந்தார். இம்முறை பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்த்தேன். "தம்பி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் காதலில் விழுந்துவிட்டீர்கள், என்று கட்டம் சொல்கிறது" என்று என்னைப் பார்த்தார். "காதலில் விழுந்தால் நாங்கள் ஏன் உங்களிடம் வருகிறோம்" என்றேன், "மூன்று மாதங்களாக பெண் பார்க்கிறோம், ஒன்றும் அமையவில்லை" என்றார் அப்பா. சற்று கோபமடைந்தார் ஜோதிடர் என்றே கருதுகிறேன், காரணம் தொடர்ந்து அவர் கூறிய சொற்கள் அப்படி. "சரி தம்பி உன்னுடைய ஜாதகப்படி நீ மாமியார் வீட்டோடு மருமகனாவாய், திருமணத்திற்கு பிறகு அப்பா அம்மாவிடம் அதிகம் ஒட்டாமல் மாமனார் மாமியாரோடு போய்விடுவாய், பெண்டாட்டி தாசனாகத்தான் வாழப்போகிறாய்" என்று உச்சஸ்தாயியில் முழங்கினார். 

              பெண்டாட்டி தாசன் என்று சொன்னதும் அப்பாவை பார்த்தேன், சந்தேகமும் ஏளனமும் கலந்த பார்வை ஒன்றை என்மீது வீசினார் அப்பா. "இவர் ஏன் நம்மை  இப்படி பார்க்கிறார், ஒரு வேளை இந்த ஜோதிடர் கூறிய வார்த்தைகளை நம்பி விட்டாரோ" என்று யோசித்தேன். "அதெல்லாம் இருக்காது" என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன், இருந்தாலும் "இவரு வேஸ்ட்டு பா, முதலில் இருந்தே எதையும் சரியாக கூறவில்லை" எனக்கூறி என்ன சொல்கிறார் பார்க்கலாம் என்று நினைத்தேன். அப்பாவின் பதில், என்ன சொல்வதென்றே தெரியாமல், திருதிருவென முழித்தேன். "அதெல்லாம் சரிதான், அவர் எதையும் சரியாகத்தான் சொல்லவில்லை, என்றாலும், பெண்டாட்டி பேச்சைக் கேட்டு ஆடக்கூடியன் போலத்தான் இருக்கிறது உன்னுடைய முழி" என்றார், முகத்தில் ஏளனம் கூட்டி. 

              உடனே "சரி வாப்பா, வீட்டுக்கு போகலாம்" என்று  ஹெல்மட்டை அணிந்து கண்ணாடியை இழுத்து விட்டு முகத்தை மூடினேன் குறிப்பாக முழியை மூடினேன். அப்பா வண்டியில் ஏறியதும் எதுவும் பேசாமல் அதிவேகமாக வீட்டுக்கு விரைந்தேன்.