1. நிலவின் வருகை
சித்திரை திங்கள் முழுமதி நாளில்
அத்தனை விண்மீன் அரண் உடைத்தே
வான்விட் டிறங்கி வான்னில வும்
தானே வந்தது தரணிக் கே
அத்தனை விண்மீன் அரண் உடைத்தே
வான்விட் டிறங்கி வான்னில வும்
தானே வந்தது தரணிக் கே
தாம்பரம் பேருந்து நிலையம், வழக்கத்தை
விட கூட்டம் அதிகமாக இருந்தது. காரணம் அன்று சித்திரை முழுமதி, அனைத்து பேருந்துகளும்
திருவண்ணாமலை நோக்கி திருப்பி விடப்பட்டிருந்தது, எனினும் கூட்டத்தின் தேவையை நிறைவு
செய்ய போதவில்லை. மிக நீண்ட வரிசையில் நின்று ஒருவழியாக நானும் என் நண்பர்களும் பயணச்சீட்டு
பெற்று பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தோம். கிரிவலம் போகவேண்டும் என்பது எங்களுடைய
வெகுநாள் ஆசை. இன்றைக்கு அது நிறைவேறப் போகிறது.
சற்று நேரத்தில் பேருந்து புறப்பட்டு பெருங்களத்தூரை அடைந்தது, அங்கேயும் கொஞ்சம் கூட்டம் ஏறியது. அப்போது என் தந்தை எனக்கு அலைப்பேசியில் அழைத்தார். அக்காவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்றார். அக்காவுக்கு இது இரண்டாவது குழந்தை, முதலில் ஒரு ஆண் குழந்தை, எனவே பெண் பிறந்ததில் அனைவருக்குமே மகிழ்ச்சி. "நான் திரும்பி வந்துவிடவா, பேருந்து பெருங்களத்தூரில் தான் இருக்கிறது" என்றேன். "வேண்டாம் வேண்டாம், குழந்தை பிறந்துவிட்டது தாயும் சேயும் நலம் தான். எதுவும் சிக்கல் இல்லை, நீ கோவிலுக்கு சென்று காலையே வா" என்றார். குழந்தை பிறந்த செய்தியை நண்பர்களுக்கும் கூறி மகிழ்ந்தேன்.
இரவு ஏறியது, வானில் நிலவும் தண்ணொளி வீசத் தொடங்கியது. தன் வெள்ளி ஒளியால் பூமியெங்கும் வெள்ளி முலாம் பூசியது போல் ஆக்கியது. கிரிவலப் பாதை எப்படியும் பதினேழு கிலோ மீட்டர் இருக்கும், கோடைக்காலத்தில் இரவு நேரத்தில் நடந்து செல்வது நன்றாக இருந்தது. கிரிவலப்பாதை எங்கும் கடைகள். பழச்சாறுக்கடை, உணவுக்கடை என எல்லாமே அங்கே இருந்தது. நாங்கள் எதுவும் சாப்பிடவில்லை. ஆங்காங்கே லெமன் சோடா மட்டும் பருகிக் கொண்டு பயணம் தொடர்ந்தோம், பல கதைகள் பேசிக்கொண்டு நடந்தோம். வழியில் சில இளம் ஜோடிகள் தோள் மீது கை போட்டுக்கொண்டு காதல் மொழி பேசிச்சென்றனர். அவர்களை பார்த்து பொருமினேன் நான். திருமணத்திற்கு பிறகு நானும் இவர்களை போலவே என்னுடைய இணையுடன் இவ்வாறே இரவு முழுக்க காதல் பேசி நடப்பேன் என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்.
மலையை சுற்றி முடிக்கவும் கிழக்கு வானில் கதிரொளி பரவவும் சரியாக இருந்தது, கால்வலி உயிர் போனது. ஒருவழியாக முடித்துவிட்டோம் இனி வீடு திரும்பலாம் என்றெண்ணும் போது ஒரு அதிர்ச்சி, அங்கேயும் பேருந்து நிலையத்தில் ஏகப்பட்ட கூட்டம். பெரும்பாடு பட்டு சென்னைக்கு வரும் பேருந்தில் இடம் பிடித்தோம். அப்படி ஒரு தூக்கத்தை இது வரை நான் போட்டதில்லை அதுவும் பேருந்துப் பயணத்தில். பயண நேரம் முழுவதுமே உறங்கியபடியே வந்து சேர்ந்தோம்.
வீட்டிற்கு வந்ததும் உடனே குளித்து முடித்து கிழக்கு தாம்பரம் கிறிஸ்துதாஸ் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கே தான் அக்காவை சேர்த்திருந்தார்கள். முதல்மாடியில் அறை கொடுத்திருந்தார்கள், உறவினர்கள் சூழ்ந்திருந்த அந்த அறையின் உள்ளே சென்று பார்த்தேன், அழகாய் ஒரு பெண்குழந்தை. அக்காவுக்கும் மாமாவுக்கும் வாழ்த்து கூறினேன். அனைவரும் பேசிக்கொண்டிருந்தோம், சற்று நேரத்தில் பேச்சின் திசை மாறியது. "வீட்டில் பெண் குழந்தை பிறந்தால், அது தாய்மாமனுக்கு திருமணம் செய்து வைக்கும்" என்றொரு விசித்திர பழமொழியை, நான் இதுவரை கேட்டறியாத புதுமொழியை கூறி என்னை கேலி செய்ய தொடங்கினர். "அடுத்து உனக்குத் தான் திருமணம் இன்னும் ஆறே மாதத்தில் உனக்கு திருமணம் முடுந்து விடும் பார்", என்றனர். வெட்கம் உள்ளுக்குள் பிடிங்கி தின்றது, இது எந்த ஊர் பழமொழியாக இருக்கும் என்று எண்ணினேன்.
"எனக்கு இப்போது திருமணம் செய்யும் எண்ணமில்லை, அதனால் திருமணப் பேச்சை விடுங்கள்" எனக்கூறி ஒருவாறு அவர்களை சமாளித்து விட்டு வெளியே வந்து அங்கே போட்டிருந்த இருக்கையில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் உள்ளே இருந்த உறவினர்கள் வெளியே வந்தனர், அவர்கள் கிளம்பிவிட்டனர். என்னிடம் "சென்று வருகிறோம்" எனக்கூறி புறப்பட்டனர். "அப்பாடா", என நிம்மதி அடைந்தேன், இனி உள்ளே திருமணப் பேச்சை எடுத்து எனைக்கிண்டல் செய்து வெட்கப்பட வைக்க யாரும் இல்லை அல்லவா?
மீண்டும் உள்ளே சென்றேன், அக்காவின் பக்கத்தில் படுத்திருந்தாள் குட்டிக்குழந்தை, அருகே சென்று முகத்தை பார்த்தேன். பால்நிலவை போன்ற பிஞ்சு முகம், சித்திரை பௌர்னமி நாளில் பிறந்தவள்முகம் முழுமதி போலவே தான் இருந்தது. எப்படி அது? வானத்தில் தான் எத்தனை எத்தனை நட்சத்திரம் அரண் அமைத்து நிலவினை கடுங்காவல் புரிகிறது, இருந்தும் எப்படி அந்த அரணை உடைத்தெரிந்து பூமிக்கு வந்தது இந்த நிலவு? இந்த திங்கள் முகத்தவள் தான் எனக்கு திருமணம் செய்துவைக்கப் போகிறாளாமே, நினைக்கவும் மீண்டும் உள்ளம் குறுகுறுத்தது. அருகே சென்று முத்தம் தந்து மகிழ்ந்தேன்.
No comments:
Post a Comment