Tuesday, July 2, 2013

Windows Phone

                     வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து தொலைகாட்சி பெட்டியை பார்த்து கொண்டிருந்தான் தினா. அப்போது மேல்மாடியிலிருந்து அவனுடைய தந்தை மேஸ்திரி சோமசுந்தரத்துடன் பேசிக்கொண்டே கீழிறங்கி வந்தார். வராந்தாவிற்கு வந்ததும் அங்கேயே நின்று இருவரும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு மேஸ்திரி சோமசுந்தரம் “நாளைக்கு வறேன் சார், காலைலயே ஆரம்பிச்சிடலாம்” என்று சொல்லிவிட்டு போனார். இதை உள்ளே தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்த தினா கவனித்தான்.
                 
                   மேஸ்திரி போன பிறகு அவன் தந்தை உள்ளே வந்து “டேய் தினா வாடா மார்க்கெட்டுக்கு போய்வரலாம்” என்றார். முகத்தை சிறியதாக்கி கொண்டு “எதுக்கு மார்க்கெட்டுக்கு இங்கேயே வாங்க கூடாதா” என்று எரிந்து விழுந்தான்.

                     “டேய். வாசகாலுக்கு கீழ போடறதுக்கு நவரத்தினம் வாங்கனும்டா, அதெல்லாம் இங்க கிடைக்காது மார்கெட்டுக்கு தான் போகனும். வா போயிட்டு வந்துடலாம்”. என்றார் தினாவின் தந்தை. வேண்டாவெறுப்புடன் சரி என்று சொல்லிவிட்டு உடைமாற்ற உள்ளே சென்றான் தினா.

                     உடை மாற்றி வந்த தினா அப்பாவின் கையில் ஒரு பெரிய பட்டியல் இருப்பதை கண்டு எரிச்சலுடன் “வா பா போகலாம்” என்றான்.
இருவருமாக தினாவின் யமஹா ஃபேஸ‌ரில் மார்க்கெட்டுக்கு சென்று நவரத்தினங்களும் இன்னும் தேவையான பொருட்களையும் வாங்கி வந்தனர்.


****

                      தினாவின் தந்தை அவர் வீட்டின் மேல்மாடியில் வீடு கட்டிக்கொண்டிருக்கிறார். தினாவிற்கு இது பிடிக்கவில்லை. இது தான் தினாவின் எரிச்சலுக்கு காரணம். வீடு கட்டும் வேலை தொடங்கியதிலிருந்தே அவன் பெரிதாக எந்த ஈடுபாடும் காட்டவில்லை. தினா இப்படி இருப்பதில் அவனுடைய தந்தைக்கு பெரிதும் வருத்தம். தினாவுக்கோ வேறு எண்ணம், அவனுடைய சிந்தனைகள் வேறு மாதிரியாக இருந்தது. அவனை பொறுத்த வரை சாப்பிட்டு தூங்கும் வாழ்கை தான் அமைதியான வாழ்கை. தேவை இல்லாமல் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு எதையாவது செய்து கொண்டிருப்பதெல்லாம் வீண் வேலை. இந்த காலத்தில் யாருமே அமைதியான வழியில் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று நினைப்பது இல்லை. யாரை பார்த்தாலும் ஒரு லட்சியம் வைத்துக்கொண்டு திரிகிறார்கள், போதாக்குறைக்கு ஷார்ட் டெர்ம் கோல் என்றும் லாங் டெர்ம் கோல் என்றும் வகை பிரித்து வகைக்கொன்றாக லட்சியம் வைத்துக்கொண்டு திரிகிறாக்கள். எல்லாம் வெட்டி வேலை, எது நடக்க வேண்டுமோ அது முன்பே குறிக்கப்பட்டிருக்க இவர்கள் தேவை இல்லாமல் அலட்டிக்கொள்கிறார்கள். என்று நினைத்துக்கொள்வான்.

                      இப்படியிருக்க தங்குவதற்கு ஒரு வீடு இருக்க தேவை இல்லாமல் அவன் தந்தை மேல்மாடியில் வீடு கட்டுவது வேண்டாத வேலை என்பது அவன் கருத்து.

                      ஒரு நாள் தினா தூங்கி எழுந்து வெளியே வந்தான் அப்போது அங்கே ஆற்று மணல் வந்து இறங்கி இருந்தது, அதை பார்த்து நின்று கொண்டிருந்தான். அப்போது அவன் தந்தை அவன் அருகில் வந்து “காலைல தான் டா மணல் வந்துச்சி” என்றார். அதற்கு அவன் “நல்லா சாமி கும்பிட்டுக்கோ பா, வீடு இடிஞ்சி விழுந்துட போகுது” என்றான்.

                      “டேய், ஊர்ல நான் மட்டும் தான் வீடு கட்டுறேனா?” என்று கோபத்துடன் கேட்டார் தினாவின் தந்தை.
                     
                       “இது என்ன மண்ணுனு நினைச்சியா. எத்தனையோ பேரோட வயித்தெரிச்சல தான் கொண்டு வந்து கொட்டி இருக்க. டிவி ல பாக்கல, ஆத்துல இருந்து மண்ணு அள்ளிகிட்டு போறாங்கனு எத்தன பேரு எப்படி எல்லாம் திட்டறாங்க.”

                      “அதுக்கு என்ன டா பண்றது, விஞ்ஞானத்துல இதுக்கு எதாவது மாற்று கண்டு பிடிக்கணும்”.

                      “என்னவோ போ, நான் சொல்ல சொல்ல என் விருப்பத்துக்கு எதிரா நீ வீடு கட்டிகிட்டு இருக்க, இதுக்கான தண்டனை உனக்கு கிடைக்கும்.” என்று சொல்லிவிட்டு தனது கைப்பேசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

                      தினா போன பிறகு இவன் என்ன இப்படி பேசறான் என்று தினாவின் அம்மாவிடம் சொல்லி வருத்தப்பட்டார் அவன் தந்தை.

                 
****

                      “அப்பறம் டா, நீ என்ன, அப்பாவ மதிக்கறதே இல்லையாமே. அப்பா எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து பேசறயாம்.”

                      “யாரு சொன்னா. நான் என்ன பண்ணேன்.”

                       “வீடு கட்டுறத நீ எதுவும் கண்டுக்கறதே இல்லையாம். எதுனா ஹெல்ப் பண்ணலாம்ல அப்பாக்கு.”

                       “ஏய் நான் என்ன பண்றது, நான் வேணும்னா கிரெடிட் கார்டுல கடன் வாங்கி தரவானு கேட்டேன், அப்பா தான் நீ வாங்கினா வட்டி அதிகம், நானே பாத்துக்கறேன்னு சொல்லிட்டாரு. அப்பறம் நான் என்ன பண்றது.”

                     “நீ தான் தினமும் மேல போய் வீடு எப்படி கட்டுறாங்கனு பாக்கணும், அப்பா என்கிட்டே ஃபோன் பண்ணி அவன் எதுவுமே ஹெல்ப் பண்ண மாற்றான், அவன்கிட்ட எதுவுமே பேச முடியல அப்டின்னு சொல்லி கஷ்டப்பட்டாரு. நான் சொல்றத சொல்லிட்டேன் அப்பறம் உன் இஷ்டம்.”

                   “சரி ஃபோன வச்சிட்டு போய் வேலைய பாரு போ”

                    தினாவுக்கும் திருமனமாகி பெங்களூருவில் செட்டிலாகிவிட்ட‌ அவன் அக்காவுக்கும் இடையே நடந்த தொலைப்பேசி உரையாடல் தான் இது. அக்காவிடம் ஃபோனில் பேசிவிட்டு சிந்தித்தான் தினா. வீடு கிட்டதட்ட கட்டி முடியும் தருவாயில் இருக்கிறது. இன்னும் மூன்று அல்லது நான்கு நாள் வேலை தான் பாக்கி இருக்கிறது. இனிமேல் எதுவும் காசு தேவைப்படாது, இதுவரைக்கும் அப்பாவே எல்லா செலவையும் பாத்துகிட்டாரு, இனிமேல் தேவைனா கூட அவரே பாத்துக்குவாரு. ஒரு வேலை காசு வேணும்னு கேட்டுட்டா!

                   தினாவிடம் கொஞ்சம் காசு இருந்தது, கடந்த இரண்டு மாதங்களாக சிக்கனமாக இருந்து அவன் ஒரு 6500 ரூபாயை சேர்த்துவைத்திருந்தான். தினா மிகவும் கஷ்டப்பட்டு இந்த 6500 ரூபாயை சேர்த்துவைத்திருப்பதன் காரணம் என்னவென்றால்,


****

                 இரண்டு மாதத்திற்கு முன்பு.

                 தினா தன்னுடைய ஃபேஸ‌ரில் விரைந்து வந்தான், அவன் வீடு இருந்த தெரு முனையில் ஒரு டீ கடையில் அவனுடைய நண்பன் அவனுக்காக காத்திருந்தான். தினா டீ கடைக்கு வந்து வண்டியை நிறுத்தியவுடன் தினாவின் நண்பன் வண்டியில் ஏறிக்கொண்டான். இருவருமாக மொபைல் ஷோரூமுக்கு சென்றனர். தினாவின் நண்பன் கடந்த ஒரு மாதமாகவே புதிய மொபைல் வாங்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தான். அதற்கான வேளை இப்போது தான் வந்தது. இன்று வாங்கிவிடவேண்டும் என்று முடிவு கட்டி தினாவையும் உடன் வரும்படி முதல் நாளே கேட்டுக்கொண்டான், தினாவும் வருவதாக ஒப்புக்கொண்டான்.
ஷோரூமில் விற்பனையாளர் சாம்சங் கேலக்சி கிராண்ட் மொபைலின் நுணுக்கங்களையும் சிறப்புக்களையும் தினாவின் நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தார். தினாவின் நண்பன் உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தான். தினா அதை கேட்க பிடிக்காமல் ஷோரூமில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மற்ற மொபைல்களை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது அவன் கண்களை ஒரு நோக்கியா மொபைல் கவர்ந்தது. அது இந்திய சந்தைக்கு இவ்வாண்டின் புது வரவு, நோக்கியா லுமியா 520 மொபைல் தான் அது!

                    அதை கையில் எடுத்து பார்த்து அதை ஆப்பரேட்டும் செய்து பார்த்தான், தினாவும் ஒரு ஸ்மார்ட் ஃபோன் வைத்திருக்கிறான் ஆனால் அது ஆண்டிராய்ட் ஃபோன். ஆண்டிராய்ட் மொபைலை இதுவரை பயன்படுத்தி வந்த அவனுக்கு இந்த விண்டோஸ் மொபைல் மிகவும் பிடித்து விட்டது, குறிப்பாக விண்டோஸ் இயங்குதளத்தின் லைவ் டைல்ஸ் அவனை பெரிதும் கவர்ந்தது. விண்டோஸின் அற்புதமான மென்பொருளுடன் நோக்கியாவின் தரமான வன்பொருள் சேர்ந்து அழகாக காட்சி அளித்த லுமியா 520 மொபைலை எப்படியும் வாங்கிவிடவேண்டும் என்று முடிவு செய்தான் தினா.

                    வீட்டிற்கு திரும்பியவுடன் தீவிர யோசனையில் ஆழ்ந்தான் தினா, வீடு கட்டிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் புதிதாக ஒரு மொபைல் வாங்க போகிறேன் என்று சொன்னால் எப்படியும் ஒப்புக்கொள்ள மாட்டார் அப்பா. தவிர தினா தற்போது வைத்திருக்கும் ஆண்டிராய்ட் ஃபோன் வாங்கி ஒரு வருடம் தான் இருக்கும். அதற்குள் இன்னொரு ஃபோன் வாங்குவதென்றால் நிச்சயம் அப்பா கண்டிப்பார். என்ன செய்வது என்று புரியாமல் யோசித்துக்கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு ஒரு வழி தோன்றியது.

                 வழி கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில் துள்ளி எழுந்து தனது கைப்பேசியை எடுத்து தனது அக்காவுக்கு ஃபோன் செய்தான். தன்னுடைய ராஜ தந்திரத்தை அக்காவிடம் கூறினான்.

                 “என்னுடைய மொபைல் உனக்கு வேணும்னு அப்பா அம்மா முன்னாடி என்கிட்டே கேளு, நான் உனக்கு என்னோட மொபைல உனக்கு குடுத்துடுவேன். அப்பறம் நான் புது விண்டோஸ் ஃபோன் வாங்கிக்கறேன். சரியா” என்றான்.

                தினாவின் அக்காவும் இதற்கு இசைந்தார். அக்காவிடம் பேசி முடித்துவிட்டு எதையோ சாதித்துவிட்டது போல மகிழ்ச்சியில் ஆடினான்.


****

                         ஒரு நாள் அலுவலகத்தில் வேலை தளத்தில் கணிப்பொறியின் முன்பு அமர்ந்து கொண்டு வேலை செய்துகொண்டிருக்கும் போது தினாவுக்கு அவன் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது. கைப்பேசியை எடுத்து காதில் வைத்து “சொல்லு பா” என்றான்.

                      “சாப்டியா டா” என்று கேட்டுவிட்டு “உன்கிட்ட காசு இருக்கா டா” என்று கேட்டார்.

                       “காசா பா எவ்வளவு வேணும்?”

                        “5000 இல்ல 10000 ரூபாய் இருக்குமா.”

                         “சரி பா, நான் உசார் பண்றேன்.”

                       “சரி வீட்டுக்கு வரும் போது எடுத்துட்டு வாடா, சுத்தமா காசு இல்ல, நாளைக்கு டைல்ஸ் வாங்கணும்.”

                        “ம்ம் சரி.”

                         அலுவலகம் முடிந்து வீட்டுக்கு போகும் போது தான் சேர்த்துவைத்திருந்த 6500 ரூபாய் பணத்தை ஏடிஎம்மிலிருந்து எடுத்துக்கொண்டு போய் வீட்டில் தன் தந்தையிடம் கொடுத்தான். அதை பெற்றுக்கொண்ட அவன் தந்தை டைல்ஸ் வாங்க போகிறேன் என்று கூறிவிட்டு கடைக்கு சென்றுவிட்டார். டைல்ஸ் வாங்க செல்கிறேன் என்றவுடன் தினாவுக்கு விண்டோஸ் மொபைலின் லைவ் டைல்ஸ் நினைவுக்கு வந்தது. படுக்கையில் சாய்ந்தான். தனது ஆண்டிராய்ட் மொபைலை எடுத்து ஆண்டிராய்ட் மார்க்கெட் அல்லது கூகிள் ப்ளே எனப்படும் ஆண்டிராய்ட் செயலிக்களின் சந்தையை திறந்தான். விண்டோஸ் தீம் என்று தேடினான். கைப்பேசித்திரையில் விண்டோஸ் ஃபோனை போன்ற தீமை ஆன்டிராய்ட் மொபைலுக்கு கொடுக்கும் பல செயலிகள் அணிவகுத்தன.

                      அதில் சிறந்த ஒரு செயலியை தரவிறக்கி இன்ஸ்டால் செய்தான். அவனுடைய ஆன்டிராய்ட் மொபைல் விண்டோஸ் ஃபோன் ஆனது.

                      அடுத்த நாள் அலுவலகத்தில் நண்பர்களிடம் அதை காண்பித்தான், அனைவரும் முதலில் என்னவென்று புரியாமல் டேய் என்ன வாங்கிட்டயா என்று ஆச்சரியத்துடன் தான் பார்த்தார்கள் விரைவில் உண்மை புரிந்து சிரித்தார்கள், தினாவும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான்.

(முடிந்தது)

1 comment: